பக்தர்களுக்கே நரகமாக மாறிய கடவுளின் சொந்த பூமி

பக்தர்களுக்கே நரகமாக மாறிய கடவுளின் சொந்த பூமி

'கடவுளின் சொந்த பூமி'  என்ற பெருமையுடைய கேரள மாநிலம் எல்லா வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிப்பது என்ற கேரள கம்யூனிச அரசின் வீண் பிடிவாதத்தால் நரகமாக மாறிவிட்டது. எங்கும் மக்கள் சரண கோஷங்களை எழுப்பியபடி கண்ணீருடன் அமைதியாக தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். 

ஆனால், கேரள அரசோ அப்பாவி பக்தர்களின் மீது அடக்குமுறையை கையாள்கிறது. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது. சபரிமலையில் இரவு 11 மணிக்கு நடையடைத்த பின் அன்னதானம் வழங்கக்கூடாது. ஓட்டல்கள் இயங்கக்கூடாது. அப்பம் முதலான பிரசாதங்கள் விற்கக்கூடாது. பக்தர்கள் அறைகளில் தங்ககூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.

சபரிமலைக்குள் மரபை மீறி நுழையும் எண்ணத்துடன் பூனேவிலிருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்த திருப்தி தேசாய் என்ற பெண்மணிக்கு எந்த டிராவல்ஸ் நிறுவனமும் கார் ஓட்ட மறுத்துவிட்டது. எந்த விடுதியும் அவர் தங்க இடம் தர தயாரில்லை. இதனால், அவர் வேறு வழியில்லாமல் பூனே திரும்பி சென்றார். மேலும், இன்று கேரளா முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இவற்றை எல்லாம், கவனித்த திருவாங்கூர் தேவசம் போர்டு சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்திரவை அமல்படுத்த மேலும் கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவெடுத்திருக்கிறது.