பஞ்சாய்த்து  செயலர்கள் நியமன முறைகேடு அமைச்சர் மீது ஐகோர்ட்டில் வழக்கு

பஞ்சாய்த்து செயலர்கள் நியமன முறைகேடு அமைச்சர் மீது ஐகோர்ட்டில் வழக்கு

திருவாரூர் மாவட்டத்தில் 3 கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் நியமனத்தில் சிபாரிசு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் காமராஜ் மீது 2 பெண்கள் உட்பட 3 பேர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட், கலெக்டரும் பிடிஓவும் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த நியமனங்கள் இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டவை என ஐகோர்ட் அறிவித்துள்ளது.

எம்.கோமதி என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நுணாகாடு கிராம பஞ்சாயத்து செயலாளர் பதவியை நிரப்ப, திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி (பிடிஓ) கடந்த மார்ச் 26-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டார். எம்ஏ பிஎட் படித்துள்ள நான், இந்த பதவிக்கு விண்ணப்பித்து, மே 15ல் நடந்த நேர்முகத்தேர்விலும் பங்கேற்றேன். இதே பஞ்சாயத்தில் தற்காலிகச் செயலாளராக நான் பல ஆண்டுகள் பணியாற்றியிருப்பதைக் கவனத்தில் கொள்ளாமல், அமைச்சர் காமராஜ் சிபாரிசுப்படி தினேஷ் என்பவரை பஞ்சாயத்து செயலாளராக நியமித்துள்ளனர். இதற்கான உத்தரவை திருத்துறைப்பூண்டி பிடிஓ கடந்த 2ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை ரத்து செய்ய வேண்டும்’ என்று முறையிட்டுள்ளார்.
 
இதுபோல், இதே பகுதியைச் சேர்ந்த மேலும் 2 பேரும், அமைச்சர் காமராஜ் சிபாரிசு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, தனி வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். மருதவனம் கிராம பஞ்சாயத்தின் செயலாளராக அவினாஷ் என்பவரை நியமித்ததை எதிர்த்து வி.ஜெயராஜ் என்பவரும், எடையூர் கிராம பஞ்சாயத்தின் செயலாளராக எஸ்.ஜெயஸ்ரீ என்பவரை நியமித்ததை எதிர்த்து மேகலா என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகளை, நீதிபதி ஆர்.மகாதேவன் நேற்று விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், 3 பஞ்சாய்த்து செயலாளர் நியமனங்களுக்கும் தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது.  அரசு தரப்பில், நியமனங்களுக்கு தடை விதிக்கக்கூடாது என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இந்த மனுக்களுக்குப் பதிலளிக்குமாறு, திருவாரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் திருத்துறைப்பூண்டி பிடிஓவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாய்த்து  செயலர்கள் நியமனம், இந்த வழக்கின் இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது என்று அறிவித்தார்.