பயங்கரவாதத்தின் மறுபெயர் மசூத் அஸார்

பயங்கரவாதத்தின் மறுபெயர் மசூத் அஸார்

மசூத் அஸார் - இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பல பத்திரிகை, தொலைக்காட்சிகளில் அண்மையில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் இதுவாகவே உள்ளது. இந்தியாவுக்கு எதிரான மிகமோசமான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய கொடூர குற்றவாளியான மசூத் அஸார், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். 

மசூத் அஸாரின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியாவின் முயற்சிகளை பாகிஸ்தான் தொடர்ந்து தடுத்து வருகிறது. அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்த தங்களால் முடிந்த அளவுக்கு மசூத் அஸாருக்கு உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதை கொள்கையாகவே கொண்டுள்ளது பாகிஸ்தான். 

பாகிஸ்தானில் 2000-ஆம் ஆண்டில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பை தொடங்கிய மசூத் அஸார், நமது நாட்டுக்கு எதிராக மிகத்தீவிரமான பயங்கரவாதத்தை முன்னெடுத்தார்.காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரித்து, அதனை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும்; அதைத் தொடர்ந்து இந்தியாவின் பிற பகுதிகளிலும் ஜிகாத் நடத்தி ஹிந்துக்களையும், முஸ்லிம் அல்லாத பிற மதத்தினரையும் அழிக்க வேண்டும் என்பதுதான் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முழுமுதற் கொள்கை. 

ஜிகாதுக்காக (தீமைகளுக்கு எதிரான புனிதப் போர்) திருமணம் செய்து கொள்ளுங்கள், ஜிகாதுக்காக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், அதற்காகவே பணமும் சம்பாதியுங்கள். இந்தியா, அமெரிக்காவின் கொடுமைகளை ஒழிக்கும் வரை போரிடுங்கள்- இது கராச்சியில் ஒருமுறை தனது இயக்கத்தின் கொள்கையை விளக்கி மசூத் அஸார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 

50 வயதாகும் மசூத் அஸார் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்; சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார் என்று அண்மையில் தகவல் வெளியாகின.  இந்நிலையில் மார்ச் 7-இல் மசூத் அஸாரின் ஆடியோ பதிவு ஒன்றை ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு வெளியிட்டது. அதில், நான் மரணமடைந்துவிட்டதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் நான் நலமுடன் இருக்கிறேன் என்று மசூத் அஸார் கூறியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிராகவும், காஷ்மீர் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் ஒழியவில்லை என்பது உறுதியாகியுள்ளது.