பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை- இந்தியா, பொலிவியா கூட்டாக வலியுறுத்தல்

பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை- இந்தியா, பொலிவியா கூட்டாக வலியுறுத்தல்

பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவும், பொலிவியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. 

லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பொலிவியா அதிபர் இவோ மொராலிஸ் அய்மாவை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, பயங்கரவாதத்துக்கு எதிரான போர், பருவநிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்வது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். 

பின்னர் இருநாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பயங்கரவாதம் என்பது சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதம் தொடர்பான அனைத்து செயல்பாடுகளுமே மனிதகுலத்துக்கு எதிரானவைதான். இதனை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பவர்கள், நிதிப் பரிமாற்றத்துக்கு உதவுபவர்கள், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருபவர்கள், பிற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டும் நாடுகள் என அனைத்து பயங்கரவாத செயல்களும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.