பயங்கரவாதிகள் பட்டியலில் பெயரை நீக்க ஹபீஸ் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு - ஐ.நா.அதிரடி

பயங்கரவாதிகள் பட்டியலில் பெயரை நீக்க ஹபீஸ் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு - ஐ.நா.அதிரடி

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடல்வழியாக ஊடுருவி நடத்தியத் தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 166 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜமா- உத் -தவா அமைப்புக்கு ஐ.நா. சபை கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடை விதித்தது. இதை எதிர்த்து, லாகூரைச் சேர்ந்த சட்ட அமைப்பு மூலம், ஐ.நா. சபையில் ஹபீஸ் சயீது கடந்த 2017ஆம் ஆண்டு முறையீடு செய்தார். 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடமும் தனது பரிந்துரையை அவர் அளித்தார். இதற்கு தனது ஒப்புதலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அளித்துள்ளது. முன்னதாக, ஹபீஸ் சயீதுவின் முறையீட்டுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன. 

ஹபீஸ் சயீது முறையீடு மீது பொதுவாக 6 மாதங்களில் முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதைவிட காலதாமதமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட அதிகாரி மாற்றப்பட்டு, புதியவர் நியமிக்கப்பட்டதே காரணம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

பாகிஸ்தானில் பதவியேற்றுள்ள இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு, பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது. ஆனால் அதேநேரத்தில், ஐ.நா. சபையில் ஹபீஸ் சயீதின் முறையீட்டுக்கு பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.