பரமசிவன் வாழுவதும் எங்களது நாடு

பரமசிவன் வாழுவதும் எங்களது நாடு

இன்று சர்வதேச மலைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மலைகளை பாதுகாத்தால் தான் மழை வளம் இருக்கும் எனவே மலைகளை பாதுகாக்க வேண்டும் என்று நோக்கத்துடன் ஐ.நா சபையால் டிசம்பர் 11ம் நாள் ஆண்டுதோறும் 'மலைகள் தினம் 'அனுசரிக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய மலையான இமயமலையை கொண்டுள்ள பெருமைக்குரியது நமது நாடு. இந்த இமய மலையில் தான் சிவபெருமானின் இருப்பிடமான கையிலாய மலை உள்ளது. சிவபெருமானுக்கு தனது மகளான பார்வதி தேவியை மணம் செய்து கொடுத்த பெருமைக்குரியவர் பர்வதராஜனான இமவான். 

சிவபெருமானின் மகனான முருகப்பெருமான் குன்று தோறும் குடி கொண்டிருக்கிறார். அவர் வேடுவர் குலமகளான வள்ளியை மணமுடித்திருக்கிறார். 

ஸ்ரீகிருஷ்ணரும்  யாதவர்களை, " இந்திரனுக்கு செய்யும் பூஜையை விடுத்து உங்களுக்கு பலவகையிலும் உதவியாக இருக்கும் கோவர்த்தன மலைக்கு பூஜை செய்யுங்கள்", என்று கூறினார்.

நம் முன்னோர்கள் இயற்கைக்கு எத்தனை முக்கியத்துவம் அளித்துள்ளனர் என்பது இவற்றால் விளங்கும்.

"கொச்சி மலை குடகு மலை எங்களது நாடு

குமரேசர் வாழுவதும் எங்களது நாடு.

பச்சை மலை பவள மலை எங்களது நாடு

பரமசிவன் வாழுவதும் எங்களது நாடு."

எனவே, மலைவளம் காப்போம். மழை வளம் பெறுவோம்.