பாகிஸ்தானின் செய்தித் தொடர்பு பிரிவுபோல் செயல்படும் காங்கிரஸ்

பாகிஸ்தானின் செய்தித் தொடர்பு பிரிவுபோல் செயல்படும் காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நிகழ்ச்சியொன்றில் பேசும்போது, பயங்கரவாதத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானைக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறில்லாமல், பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுக்கு தடை விதிப்பது உள்பட அந்நாட்டுக்கு எதிராக எடுக்கப்பட்ட சில கடுமையான நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் மீது ராணுவ ரீதியாகவும், வேறு வழிகளிலும் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், பாகிஸ்தானை இந்திய அரசு ஒடுக்கியுள்ளது. ஆனால், இந்தியர்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைத்து வரும் பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றே தெரிகிறது. மேலும், பாகிஸ்தான் அரசின் வெளியுறவு செய்தித் தொடர்பு பிரிவு போல் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் குரலையே அக்கட்சி ஒலித்து வருகிறது. 

சர்வதேச அரங்கில் நம்பகத்தன்மையை பாகிஸ்தான் இழந்து விட்டது. ஆனால், அந்நாட்டு அரசின் விருப்பத்துக்கு ஏற்ப காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்கள். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், அதற்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் ஆகிய சம்பவங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த நாடும், நமது அரசுக்கும், ராணுவத்துக்கும் ஆதரவாக இருந்தனர். ஆனால், காங்கிரஸ் தலைவர்களும், பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசினர். இது மிகவும் துரதிருஷ்டவசமான, கண்டிக்கத்தக்க செயலாகும். இந்த துரோகத்துக்காக மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தகுந்த தண்டனை அளிப்பார்கள் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறினார்.