பாகிஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறலாம் - பாஜக

பாகிஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறலாம் - பாஜக

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் தலைவர்கள் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவுகள் பாகிஸ்தானியர்களால் அதிகம் பகிரப்பட்டுள்ளன. அங்குதான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவும், செல்வாக்கும் அதிகரித்துள்ளது. எனவே, அக்கட்சியினர் அங்கு போட்டியிட்டால் எளிதில் வெற்றிபெற முடியும். இதுதான் நமது நாட்டின் எதிர்க்கட்சியின் இப்போதைய நிலைமை. 

நமது நாட்டில் உள்ள விஷயங்கள் குறித்துப் பேசும்போது பொய்யான கட்டுக்கதைகளை மட்டும் காங்கிரஸ் கூறிவருகிறது. இந்தத் தேர்தலை நல்ல இலக்குகள் ஏதுமின்றி காங்கிரஸ் சந்தித்து வருகிறது. நாட்டில் நல்லதொரு ஆட்சி உள்ளது. அதனை அகற்றிவிட வேண்டும் என்பதே காங்கிரஸின் தீயநோக்கமாக உள்ளது. பாஜகவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் ஒன்றிடமாவது தேசிய நலன் குறித்த அக்கறையும், நாட்டின் எதிர்காலம் குறித்த சிறந்த நோக்கங்களும் உள்ளனவா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களிடம் அப்படி எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளதா அல்லது பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளதா என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். இந்திய ராணுவத்தின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் அளவுக்கு காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு உள்ளது. பாஜக ஆட்சியின் சாதனைகளையும், பாதுகாப்பு விஷயத்தில் மேற்கொண்ட துணிச்சலான முடிவுகளையும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாவிட்டால் கூட பரவாயில்லை. அரசியலுக்காக நமது ராணுவ வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர் என்று பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.