பாகிஸ்தானில் தொடரும் அவலம் - மேலும் ஒரு ஹிந்து சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம்

பாகிஸ்தானில் தொடரும் அவலம் - மேலும் ஒரு ஹிந்து சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சமீபத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் கடத்தப்பட்டு, இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டு, அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த கொதிப்பு நிலை அடங்கும் முன்பாகவே, தற்போது அதே மாகாணத்தில் மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது . 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர், ஹிந்து மதத்தைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் மைனர் என்றும், அவர் கடத்திச் செல்லப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவரது தந்தை புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எனினும், அந்தப் பெண் தற்போது தனது மனைவி எனவும், இஸ்லாம் மதத்துக்கு மாற்றிய பிறகே அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் சம்பந்தப்பட்ட நபர் கூறியதாக பாகிஸ்தானின் டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த 17-ஆம் தேதி சமாரோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் அந்தப் பெண் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்பட்டதாக ஆவணங்களை வெளியிட்டுள்ள அந்த நபர், அந்தப் பெண்ணுக்கு தற்போது 19 வயது என்றும் கூறியுள்ளதாக டான் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.