பாகிஸ்தான் பாலகோட் முகாமில் 263 தீவிரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தான் பாலகோட் முகாமில் 263 தீவிரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்திய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 263 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் 263 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை இந்திய உளவுத் துறை உறுதி செய்துள்ளது. உயிரிழந்த தீவிரவாதிகளில் 18 பேர் மூத்த தளபதிகள் ஆவர். 25 பேர் தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஆவர் என்று ‘டைம்ஸ் நவ்' சேனல் ஒளிபரப்பியது.

இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில், பாலகோட் தீவிரவாத முகாம் மீதான தாக்குதலில் அங்கு தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 4 வீரர்களும் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் போல காஷ்மீரில் மேலும் ஒரு தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது திட்டமிட்டுள்ளது. இதற்காக 6 தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.