பாஜகவை பார்த்து இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டாம் - முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத் கருத்து

பாஜகவை பார்த்து இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டாம் - முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத் கருத்து

இஸ்லாமியர்களும் வாக்களித்து தான் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. பாஜகவை பார்த்து இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் ஷேக்தாவூத் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதால், அந்த கூட்டணியை ஆதரிக்கிறோம்.பாஜகவைப் பார்த்து இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. 2014 மக்களவைத் தேர்தலில், இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 73 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆக, இஸ்லாமியர்களும் வாக்களித்துதான் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது.

தவிர, காங்கிரஸ் ஆட்சியின்போது தான் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்தது. காங்கிரஸ் நினைத்திருந்தால், இந்த சம்பவத்தையே தவிர்த்திருக்கலாம். அதே போல, தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்காக கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். அதே சமயம், காங்கிரஸ், திமுகவுடன் சில இஸ்லாமிய கட்சிகள் கூட்டணியும் அமைத்துள்ளன. அதிமுக கூட்டணி தலைமையிலான பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறுவோம். அதேநேரம், பாஜக தவறு செய்தால், அதை கண்டித்தும் போராடுவோம் என ஷேக்தாவூத் கருத்து தெரிவித்துள்ளார்.