பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் குடிசையில்லா இந்தியாவை 2022-க்குள் உருவாக்குவோம் - ராஜ்நாத் சிங் உறுதி

பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் குடிசையில்லா இந்தியாவை 2022-க்குள் உருவாக்குவோம் - ராஜ்நாத் சிங் உறுதி

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஜனநாயக விரோத, ஊழல் வழக்குகள் நிறைந்த கூட்டணி. இந்தக் கூட்டணியில் உள்ளவர்கள் ஜெயிலிலும், பெயிலிலும் உள்ளனர். அந்தக் கூட்டணிக்கு சிறந்த தலைமை, வழிகாட்டி இல்லை.

பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் பின்தங்கியிருந்த இந்தியா, நரேந்திர மோடி ஆட்சி வந்த பிறகு தற்போது 5-வது இடத்தை பெற்றுள்ளது. இதை உலக நிதி நிறுவனமும் பாராட்டியுள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின்கீழ் கடந்த 2009-14-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டித்தரப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் 1.30 கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. 

குடிசை வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு, 2022-க்குள் குடிசையில்லா இந்தியாவாக மாற்றுவோம். இருமடங்கு லாபம் பெறும் வகையில் விவசாயிகளுக்கான திட்டங்களை கொண்டு வருவோம். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 1,990 தமிழக மீனவர்களை மீட்டுள்ளோம். இலங்கை தமிழர்களுக்கு 14 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம் என்று பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து, பெரம்பலூர் வானொலி திடலில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.