பாஜக கூட்டணிக்கு 285 இடம் கிடைக்கும் - இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

பாஜக கூட்டணிக்கு 285 இடம் கிடைக்கும் - இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

மக்களவை  தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றும் என்று ‘இந்தியா டிவி - சிஎன்எக்ஸ்’ கருத்துக் கணிப்பு நடத்தியது. 

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 285 இடங்களைக் கைப்பற்றும். மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை விட (272) இது 13 இடங்கள் அதிகம். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜக 282 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால்,  வரும் தேர்தலில் பாஜக 238 இடங்களில் வெற்றி பெறும். இது கடந்த தேர்தலை விட 34 இடங்கள் குறைவாகும். பாஜக கூட்டணியில் பாஜக 238, சிவசேனா 10, ஐக்கிய ஜனதா தளம் 12, அதிமுக 12, அகாலி தளம் 3, லோக் ஜனசக்தி கட்சி 3 மற்றும்  பிராந்திய, சிறு கட்சிகளை சேர்த்து என்டிஏ 285 இடங்களைப் பெறும்.

பாஜக 238, காங்கிரஸ் 82, திரிணமூல் 30, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22, சமாஜ்வாதி 18, பகுஜன் சமாஜ் 16, திமுக 16, அதிமுக 12, டிஆர்எஸ் 14, இடதுசாரி முன்னணி 6, ஐக்கிய ஜனதா தளம் 12, என்சிபி 7, ஆர்ஜேடி 8, சிவசேனா 10, பிஜு ஜனதா தளம் 14, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 38. மொத்தம் 543. இவ்வாறு ‘இந்தியா டிவி - சிஎன்எக்ஸ்’ கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த கருத்துக் கணிப்பில் 2.5 சதவீத இடங்கள் கூடுதலாக கிடைக்கலாம் அல்லது குறையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 193 மக்களவை தொகுதிகளில், கடந்த 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 38 ஆயிரத்து 600 வாக்காளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

பணமதிப்பு நீக்கம், ரஃபேல் விவகாரம் போன்றவற்றால் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளது என்று   செய்திகள் வெளியாயின.

இந்நிலையில்  பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மீது இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்திய பிறகு மோடிக்கு குஜராத், இமாச்சல், உத்தராகண்ட், கோவா, டெல்லி ஆகிய மாநிலங்களில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் உள்ள எல்லா மக்களவை தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என்று தெரிகிறது.