பாஜக மூத்த தலைவர் கோவாவின் முதல்வராக பதவியேற்பு

பாஜக மூத்த தலைவர் கோவாவின் முதல்வராக பதவியேற்பு

கோவாவின் புதிய முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர், பிரமோத் சாவந்த், 46, நேற்றிரவு பதவியேற்றார். கூட்டணி கட்சிகளான, மஹாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியின் சுதீன் தவாலிகர், கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய் ஆகியோருக்கு,துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த பரீக்கர், நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. 

இதையடுத்து 'சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்' என, கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, பரீக்கர் மறைவால், ஆட்சி கவிழாமல் தடுக்கும் முயற்சியில், பா.ஜ., தலைவர்கள் ஈடுபட்டனர். கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவரும், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சருமான, நிதின் கட்கரி ஆகியோர், பா.ஜ., மற்றும், கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களுடன், பனாஜியில் தீவிர ஆலோசனை நடத்தினர். 

இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த கூட்டத்தில், கோவா சட்டசபை சபாநாயகரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரமோத் சாவந்த், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணி கட்சிகளான, மஹாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியின் சுதீன் தவாலிகர், கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய் ஆகியோருக்கு, துணை முதல்வர்பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்றிரவு, கோவா முதல்வராக,பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.