பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவுடன் அமைதிக்கு வாய்ப்பு -  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவுடன் அமைதிக்கு வாய்ப்பு - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுக்கும், ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாணவும் வாய்ப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். 

இஸ்லாமாபாதில் புதன்கிழமை வெளிநாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் குழுவைச் சந்தித்த இம்ரான் கான், இந்தியாவில் வலதுசாரி (பாஜக) ஆட்சி அமைந்தால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாணும் விஷயத்தில் பிரச்னை ஏற்படும் என்று பிற கட்சிகள் நினைக்கலாம். ஆனால், பாஜக வெற்றி பெற்றால், இந்தியாவுடன் அமைதிப் பேச்சு நடத்தவும், ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணவும் வாய்ப்பு அதிகம் என்றே நான் கருதுகிறேன். 

காஷ்மீர் விவகாரம்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே முக்கியப் பிரச்னையாக உள்ளது. பாகிஸ்தானின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது. எனவே, நாங்கள் பயங்கரவாத அமைப்புகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதிலும், அதன் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது என்பதிலும் இந்தியத் தரப்பு உறுதியாக உள்ளது. எனவே, காஷ்மீர் குறித்து யாருடனும் பேச்சு நடத்த முடியாது என்று இந்தியா ஏற்கெனவே தெளிவுபடக் கூறிவிட்டது.