பாரதத்தின் பொற்காலத்தை மீட்டெடுக்க, திரு மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்

பாரதத்தின் பொற்காலத்தை மீட்டெடுக்க, திரு மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப்படும்

என்ற குறளுக்கு இலக்கணமாக விளங்கும் பாரதப் பிரதமர் ஸ்ரீநரேந்திர தாமோதர மோதி அவர்களுக்கு, இந்த வேதநெறி இதழைப் பேரன்புடன் ஸமர்ப்பித்து மகிழ்கிறோம்.

     அறிவொளியில் மகிழ்கின்ற மக்கள் வாழ்கின்ற நம் பாரத நாடு, பல யுகங்களின் பழைமையோடு ஒளிர்கின்றது.

     வேதரிஷிகளின் திருவாக்கும், இதிஹாஸ புராணங்களில் அவதார புருஷர்களின் வாழ்வும் இத்தேசத்தில் தெய்வீகத்தை நிறைத்துள்ளன.

     அந்நிய படையெடுப்புகள், பிற மதங்களின் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றையெல்லாம் தாங்கி, அரசியல் சுதந்திரம் பெற்ற பிறகும் வறுமை, லஞ்சம், ஊழல் என எத்தனையோ பிரச்சினைகள்.

     இடையில் கண்ணயர்ந்த காலத்தில், வரலாற்றையே திருடி, மாற்றி எழுதிய நயவஞ்சகம், கல்வி, வேளாண்மை என அத்தனை துறைகளிலும் இழக்கக்கூடாதவற்றை இழந்து தவிக்கும் கொடுமை.

     இந்த தேசத்தில், அறம் குறைந்து, மறம் மேலோங்கும்போதெல்லாம், அருளாளர்களின் தவப்பயனாக, நல்ல தலைவர்கள் உருவாகி, ஸநாதந தர்மத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்டுவர்.

     பாரத நாட்டின் வளர்ச்சி ஒன்றையே, இதயத்துடிப்பாகக் கொண்டு, ஊழலை ஒழிக்க முழுமூச்சில் இறங்கி, பயங்கரவாதத்தை வேரறத்து, பல பரிமாணங்களில் அயராது உழைத்து வருபவர் பிரதமர் மோதி அவர்கள்.

     இருபத்து நான்கு மணிநேரமும், வாரத்தின் ஏழு நாட்களும், வருடத்தின் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் ஓய்வின்றி ஒருவர் உழைக்க முடியுமா?

     சிறிதும் சோர்வின்றி, தொடர்ந்து சிந்தித்துச் செயலாற்ற முடியுமா?

     கடும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், தடைகளைத் தகர்தெறிந்து, முன்னேறிக்கொண்டே இருக்க முடியுமா?

     பாரதம் பிரதமரின் கைகளில் பத்திரமாக இருப்பதை அறிந்து, பல கோடி பாரத மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுகின்றனர். துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களை நீராட்டி வழிபட்டபோது, உள்ளம் நெகிழ்ந்தனர்.

     இதுதான் பாரதப் பண்பாடு! சமத்துவம், பிற்படுத்தப்பட்டோர் என்றெல்லாம் கூவி, பிரிவினைகளை வளர்ப்பதல்ல, அனைவருக்குள்ளும் இறைவனைக் கண்டு பூசித்தல்.

     திரு மோதி அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், அவரது எளிய குடும்ப பின்னணி, ராஷ்ட்ரீய ஸேவக் ஸங்கத்தில் அவர் பெற்ற பயிற்சிகள், குஜராத் மாநில முதல்வராக அவர் படைத்த ஸாதனைகள், அவர் வசிக்கும் இடம் போன்ற எண்ணற்ற விவரங்கள் இணையத்தில் உள்ளன.

     அவர் தம்முடைய நேர்மையாலும், அஞ்சா நெஞ்சத்தாலும் தன்னலமற்ற அர்ப்பணிப்பாலும் பல கோடி இந்தியர்களின் இதயத்தில் குடியிருக்கிறார். உலக அரங்கில் பாரத நாட்டின் திருக்கொடியை உயர்த்திப் பிடித்து வருகிறார் நம் தேசத்தின் பிரதமர்.

     பாரத தேசத்தின் சரித்திரத்தையே, உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த அவருடைய சரித்திரம், ஒரு திறந்த புத்தகமாக இருக்கிறது. பொது வாழ்விலும் தனி வாழ்விலும் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர். கும்பமேளாவில் 130 கோடி மக்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்து நீராடிய பெருமகனார்.

     நம் தேசத்தின் தெய்வீகம் நிறைந்த பண்பாட்டிற்குச் சற்றும் பொருந்தாத பொது ஒழுங்கற்ற வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் திரு. மோதி அவர்கள்.

கீதையின் பாதையில் ……..

     கடமைகளில் விருப்பு வெறுப்பின்றி, கடமைகளின் பலன்களிலும் விருப்பு வெறுப்பின்றி, இறைவழிபாட்டுணர்வுடன் செயலாற்றுவதே கர்மயோகம் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் உபதேசித்தருளியுள்ளார். கர்மயோக மனோபாவனையைக் கடைப்பிடிப்பவர் நம் பிரதமர் மோதி.

குறள் நெறியில்

     இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

     துன்பம் துடைத்தூன்றும் தூண்

                           (குறள் - 615)

     இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

     துன்பம் உறுதல் இலன்

                           (குறள் - 628)

     போன்ற குறட்பாக்களுக்கு இலக்கணமாகத் திகழும் ஒப்புயர்வற்ற தலைவர் திரு. மோதி அவர்கள்.

ஸாதனைகளில் சில……

     பாரத மாலா திட்டத்தின் கீழ் பதினாறு மாநிலங்களில் 35.000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு 27 கி.மீ. தூரத்திற்குச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

      சேது பாரதம் என்ற திட்டத்தின் வாயிலாக 1500  பாலங்கள் நவீனப்படுத்தப்பட்டு, ஆளில்லா இரயில்வே கேட் இல்லாத நிலையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

     ஸாகர் மாலா திட்டத்தின் கீழ் 12 பெரிய துறைமுகங்களும் 185 சிறு துறைமுகங்களும் நவீன வசதிகளைப் பெற்று வருகின்றன.

     இன்று, பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பரபரப்பான வாராணஸி ரயில் நிலையத்தின் தூய்மையைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை. முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு இது விளக்கமாக இருக்கிறது.

     பாரத தேசத்தின் வளர்ச்சி, சீனாவை விஞ்சுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்ந்துள்ளது. பணவீக்கம் 6.4லிருந்து 4.1ஆகக் குறைந்துள்ளது.

     6 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. க்ராம் ஜ்யோதி யோஜனாவின் கீழ் 18,542  கிராமங்கள் மின்சார ஒளியைப் பெற்றுள்ளன. உஜ்ஜ்வலா யோஜனாவின் கீழ் பத்து கோடி குடும்பங்கள் சமையல் எரிவாயு பெற்றுள்ளனர்.

     பண மதிப்பிழப்பின் மூலம், கணக்கில் வராத பண பரிவர்த்தனைகள் ஒழிக்கப்பட்டன. ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 31 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்குத் துவங்கப்பட்டுள்ளது. முத்ரா என்ற திட்டத்தின் கீழ் 12 கோடிக்கும் அதிகமான மக்கள் கடன் வசதி பெற்றுள்ளனர்.

     கொல்கத்தாவிலிருந்து வாராணஸி வரை, நீர்வழி சரக்குப் போக்குவரத்துத் தொடங்கப்பட்டது.

     பி.எம்.கிஸான் ஸந்மாந் நிதி என்ற திட்டத்தின் கீழ் 12 கோடி விவசாயிகள், ஆண்டுதோறும் ரு. 6000 ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர். ஆண்டு வருமானம் ஐந்து லட்சத்திற்குமேல் இருப்பவர்களிடமிருந்து மட்டுமே வரி வசூலிக்கப்படுகிறது.

     இன்னும் இன்னும் பல துறைகளில் வளர்ச்சிக்கானத் திட்டப்பணிகள் வகுக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சில சிகரங்கள்

     தம்முடைய சொந்த பணம் 21 லட்சத்தில் கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி ஏற்படுத்திக் கொடுத்தார். குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது பெற்ற அன்பளிப்புகளை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் கிடைத்த 89.96 கோடியை பெண் குழந்தைகளின் நலனுக்காகச் செலவிட்டுள்ளார்.

     அன்பளிப்புகளின் மூலம் பெற்ற 8.33 கோடி பணத்தை நமாமி கங்கே திட்டத்திற்காகச் செலவிட்டுள்ளார். தென்கொரியாவில் பெற்ற சீயோல் அமைதிப் பரிசு ரூ 1.3 கோடியையும் நமாமி கங்கே திட்டத்திற்குக் கொடுத்துள்ளார்.

     பாரதத்தின் பொற்காலத்தை மீட்டெடுக்க, திரு மோதி அவர்கள் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்து வாழ்த்தி மகிழ்கிறோம்.

     நிந்தந்து நீதிநிபுணா : யதி வா ஸ்துவந்து

     லக்ஷ்மீ : நிவஸது வா கச்சது வா யதேஷ்டம்

     அத்யைவ வா மரணமஸ்து யுகாந்தரே வா

     ந்யாய்யாத் பதம் நப்ரவிசலந்தி தீரா::!!

     நீதியறிந்த பெரியோர்கள் புகழட்டும் அல்லது இகழட்டும், திருமகள் தம்மிடத்தில் நிலைத்திருக்கட்டும் அல்லது நீங்கிச் செல்லட்டும். இன்றே மரணம் வரட்டும் அல்லது யுகத்தின் முடிவில் வரட்டும். தீரர்கள், அறவழியிலிருந்து ஒரு பொழுதும் விலக மாட்டார்கள்.