"பாலாறு தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - பேரவையில் முதல்வர் உறுதி

"பாலாறு தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - பேரவையில் முதல்வர் உறுதி

பாலாறு நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப் பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ, நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்தவொரு செயலையும் மேற்கொள்ள முடியாது. ஆந்திர அரசிடம் இருந்தோ, மத்திய அரசிடம் இருந்தோ பதில் ஏதும் வராத நிலையில், பாலாற்றின் குறுக்கேயுள்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு, மறுகட்டமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 19-இல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்திருப்பதாக கடந்த 5-ஆம் தேதி செய்திகள் வெளியாகின. இந்தப் பிரச்னை குறித்து ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாலாறு நதிநீர் பிரச்னையில் தமிழக அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும் சட்டரீதியாகப் பிரச்னையை தொடர்ந்து அணுகி வருகிறது.

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார் முதல்வர் பழனிசாமி.