பா.ஜ.,வின் வளர்ச்சி எச்சரிக்கை மணியடிக்கிறது - திரிணமுல் காங்கிரஸ் கலக்கம்

பா.ஜ.,வின் வளர்ச்சி எச்சரிக்கை மணியடிக்கிறது - திரிணமுல் காங்கிரஸ் கலக்கம்

மேற்கு வங்கத்தை ஆளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, கோஷ்டி பூசல், ஊழல் உட்பட பல்வேறு பிரச்னைகளில் சிக்கியுள்ளதால், கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான, மம்தா பானர்ஜி கலக்கம் அடைந்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலம், இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது ஒரு காலம். 1977ல் துவங்கி, 2011 வரை, மாநிலத்தில் தொடர்ந்து, இடதுசாரி கூட்டணியே ஆட்சி செய்து வந்தது. 'இடதுசாரிகளை தோற்கடிக்க முடியாது' என, அனைவரும் நினைத்த போது, காங்கிரசிலிருந்து பிரிந்த மம்தா பானர்ஜி, 1998ல், திரிணமுல் காங்கிரஸ் கட்சியை துவக்கினார். கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் அமோக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. முதல்வராக, மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார்.

இதன்பின், மேற்கு வங்க மாநிலத்தில், இடது சாரி கட்சிகளின் ஆதிக்கம் வீழ்ச்சி அடைந்தது. 2014ல் நடந்த லோக்சபா தேர்தல், 2016ல் நடந்த சட்டசபை தேர்தல்களில், திரிணமுல் கொடியே உயர பறந்தது. ஆனால், இப்போது நடந்து வரும் லோக்சபா தேர்தலில், திரிணமுல் கொடி, மீண்டும் உயர பறக்குமா என்பதில், பெரும் சந்தேகம் நிலவுகிறது. இடதுசாரிகள் ஆட்சியில், அராஜகம், வன்முறை, ஊழல் போன்ற வற்றை எதிர்த்து, கடுமையான போராட்டங்ளை நடத்தி தான், மக்கள் மனதில், மம்தா இடம் பிடித்தார். ஆனால், 'மம்தா ஆட்சியிலும், அராஜகம், வன்முறை, ஊழல் போன்றவை தலைவிரித்தாடுகின்றன' என, திரிணமுல் தொண்டர்களே குற்றம் சாட்டுகின்றனர்.

'எந்த நலத்திட்டங்களின் பலன்களை பெறவும், திரிணமுல் கட்சியின் உள்ளூர் தலைவர்களுக்கு, லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது' என, மக்கள் புலம்புகின்றனர். அதேபோல், கட்சியில் கோஷ்டி பூசல்களும் பெரிய அளவில் தலை துாக்கியுள்ளன. சிறு கிராமத்தில் கூட, கோஷ்டியால், கட்சி பிரிந்து கிடக்கிறது. 

அதேநேரத்தில், கடந்த, ஐந்து ஆண்டுகளில், மாநிலத்தில், பா.ஜ., மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆளும் திரிணமுல் கட்சிக்கு அடுத்த இடத்தில், தற்போது, பா.ஜ., தான் உள்ளது என, உறுதியாக கூறலாம். இடதுசாரிகளுக்கு எதிராக, திரிணமுல் காங்.,கை, மம்தா எப்படி வளர்த்தாரோ, அதே பாணியில், மாநிலத்தில், கட்சியை, பா.ஜ., வலுப்படுத்தியுள்ளது. அதனால், மேற்கு வங்கத்தில், இம்முறை லோக்சபா தேர்தல், திரிணமுல் காங்., - பா.ஜ., இடையிலான போட்டியாக மாறியுள்ளது.