பிப்ரவரி 24 - தினகரன் கூடாரம் காலியாகிறது

பிப்ரவரி 24 - தினகரன் கூடாரம் காலியாகிறது

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 21 இடங்கள் காலி.  அவற்றில் அதிமுகவுக்கு 114 உறுப்பினர்கள் உள்ளனர்.  தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்ட 3 பேர் அதிமுகவுக்கு எதிர் நிலைப்பாட்டில் உள்ளனர். சபாநாயகரை தவிர்த்துவிட்டு பார்த்தால் 110 பேர் மட்டுமே உள்ளனர். எதிர்பக்கம் 99 பேர் இருக்கிறார்கள். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வரவுள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், குறைந்தபட்சம் 8ல் வெற்றிப்பெற வேண்டும். ஆனால் அதிமுக வின் இலக்கு அத்தனையும் கைப்பற்ற வேண்டும் என்பதே.

இந்த 21 இடங்களில், பாமக வுக்கு பல தொகுதிகளில் கணிசமான வாக்கு வாங்கி உள்ளது. இதை அப்படியே அதிமுகவுக்கு திருப்பவே, பாமகவுக்கு  7 சீட்  கொடுக்க அதிமுக ஒப்புக்கொண்டது. பாஜகவுக்கும் ஒரு சில தொகுதிகளில் 5% சதவிகிதத்திற்கும் அதிகமான ஓட்டு உள்ளது.

4 பாராளுமன்ற தொகுதிகள், 1 அல்லது 2 சட்டமன்ற தொகுதிகள் தேமுதிக வுக்கு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. 

இவை அனைத்தும் மோடிக்கான வாக்கு வங்கியுடன் சேரும்போது, இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 20 முதல் 25 வரையிலான இடங்களிளும், இடைதேர்தலில்  15 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றிபெறும் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.  இதன் மூலம் அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதுடன், தினகரனின் கனவும் தகர்க்கப்படும் என்பதே நிதர்சனம்.

திமுக கூட்டணியும் வலுவானது என்பதால் பாராளுமன்ற தேர்தல் பொறுத்தவரை இரு கூட்டணிகளுக்கும் சமமான அளவு வெற்றி கிடைக்கும் என அனுமானிக்கப்படுகிறது.

இரண்டு யானைகள் மோதும்போது, சுற்றியுள்ள சிறிய மிருகங்கள் மிதிபட்டு காணாமல் போய்விடும். 2016ல், திமுக, காங்கிரஸ், அதிமுக தவிர்த்து பிற கட்சிகள் பெரிய பாதிப்பை சந்தித்தன. ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.  அது போல இம்முறை தினகரன், கமல், சீமான் உள்ளிட்டோர் பலத்த சேதத்தை சந்திப்பார்கள் என தெரிகிறது. 

"இவர் மட்டும் ஜெயித்துவிட்டார், தவிர நெறய சேர்த்தும் விட்டார். நமக்கு பதவியும் இல்லை, ஒரு பிரயோஜனமும் இல்லை. அதிமுக அழைப்பை ஏற்று, அங்கேயே சேர்ந்து விடலாம்" என்கிற எண்ணமும் சிலர் மத்தியில் உள்ளதாம்.

தினகரன் தவிர்த்து  யார் வேண்டுமானாலும் வரலாம்,  உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குகிறோம் என்று அதிமுக தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டுள்ளது. 

இதையடுத்து 24 பிப்ரவரி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று, கணிசமான தினகரன் கட்சியினர், மீண்டும் அதிமுகவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தடுக்க தானும் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் தினகரன், ஆனால் உதிரி கட்சிகள் மற்றும் சாதி அமைப்புக்கள் தவிர்த்து யாரும் இவருடன் அணி சேர விரும்பவில்லை.  ஒரு வேளை திமுக கூட்டணியில் இருந்து, வைகோ விலகினால், இவருடன் கைகோர்க்க வாய்ப்புள்ளது.