பிரதமரின் பேட்டி - சில துளிகள்

பிரதமரின் பேட்டி - சில துளிகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ANI செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அந்த பேட்டியிலிருந்து சில முக்கிய பகுதிகள் இங்கே.

 ·         நாங்கள் இந்த நான்கரை ஆண்டுகளில் எப்படி பணியாற்றியுள்ளோம் என்பதை மக்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.


 · பாராளுமன்றத்தில் நல்ல காரசாரமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன். ஒவ்வொரு விஷயத்தையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப்போட்டு விவாதிக்க வேண்டும். இன்னும் நன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை அரசுக்கு தர வேண்டும். ஆனால், இப்போது அது குறைந்து வருகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.

·   எனக்கு முன்னாள் பிரதமராக இருந்தவர்களும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார்கள். ஆனால், அவை எல்லாம் கவனிக்கப்படவில்லை.அவர்கள் எந்த நாட்டுக்கு சென்றார்கள் என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனால், நான் கவனிக்கப்படுகிறேன். அதற்கு காரணம் நான் மக்களை சென்றடைந்திருக்கிறேன். அது தான் ஒரே வித்தியாசம்.

 ·   இந்தியா பாரம்பரியமாகவே அகிம்சையை பின்பற்றும் நாடு. அது மன்மோகன் சிங் ஆட்சியானாலும் சரி, மோடி ஆட்சியானாலும் சரி. அது எப்போதுமே இப்படித்தான் இருந்து வந்துள்ளது.

·         ரபேல் தொடர்பாக எதிர்கட்சிகள் வைக்கும் குற்றசாட்டுகள் என் மீது அல்ல. அரசின் மீது தான். ஆனாலும், அது குறித்து என்னிடம் கேள்விகள் கேட்கப்படும் போது நான் பதில் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். இந்த குற்றசாட்டுகளுக்காக நான் வீட்டிலேயே முடங்கி கிடக்க முடியாது. நான் “மேக் இன் இந்தியா திட்டத்தின் மீதும் நாட்டின் பாதுகாப்பின் மீதும் தான் அதிக அக்கறை செலுத்துகிறேன்.

·         முத்தலாக் ஒழிப்பு மசோதா பாலின சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலைநாட்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அதை மத நம்பிக்கைகளில் தலையீடாக பார்க்கக்கூடாது.

·         விவசாயிகளுக்கு கடன் தள்ளிபடி செய்வதை விட அவர்கள் முன்னேற்றத்திற்கான நல்ல திட்டங்களை கொண்டு வருவதே அவசியம்.

·         காங்கிரஸ் என்பது ஒரு கலாசாரம், ஒரு சித்தாந்தம் என்று காங்கிரஸார் நம்புகிறார்கள். முதலில் அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். சரியாக சொல்லுவதென்றால் காங்கிரசிடமிருந்தே காங்கிரஸ் விடுபட வேண்டும்.

·         நாட்டின் ராணுவத்தை பலவீனமாக்க நினைப்பவர்கள் தான் ரபேல் விஷயத்தில் குற்றசாட்டுக்களை தொடுக்கிறார்கள். என் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகளை தொடுக்கிறார்களே என்று நான் கவலைப்பட வேண்டுமா? அல்லது நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதைப்பற்றி யோசிக்க வேண்டுமா? என் மீது எத்தனை குற்றசாட்டுகள் வந்தாலும் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து நேர்மையின் பாதையில் செல்வது என்று நான் முடிவெடுத்து விட்டேன். என் ராணுவ வீரர்களை “அவர்கள் விதிப்படி நடக்கட்டும், என்று என்னால் விட முடியாது. அவர்களுக்கு என்னென்ன தேவையோ அவற்றை எல்லாம் நான் செய்து தருவேன். என் மீது எத்தனை குற்றசாட்டுகள் வந்தாலும் சரி.

·         மத்திய தர வர்கத்தினர் தான் இந்திய சமூகத்தின் முதுகெலும்பு. அரசின் நலத்திட்டங்களை பெரும்பாலும் அவர்களே பயன்படுத்துகிறார்கள். மத்திய தர வர்கத்தினரை பாதுக்காப்பதற்காக பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. மத்திய தர வர்க்கத்தினருக்கு உதவுவது எனது அரசின் கடமை.

·         நாட்டை விட்டு ஓடிப்போனவர்கள் (சொக்சி, மல்லையா) நாட்டிற்கு திரும்ப கொண்டு வரப்படுவார்கள். அதற்கான சட்டபூர்வமான, தூதரக ரீதியிலான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் பணத்தை திருடியவர்கள் ஒரு பைசா பாக்கியில்லாமல் திருப்பி தந்தாக வேண்டும்.

 ·         இதெல்லாம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுகள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை திடீரென்று செய்து மக்களை அதிர்ச்சியடைய செய்யவில்லை. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாகவே உங்களிடம் இருக்கும் முறையற்ற செல்வத்தை அரசிடம் அபராதத்துடன் செலுத்தி விடுங்கள். உங்களுக்கு அரசு உதவி செய்யும் என்று சொன்னோம். சிலர் முன்வந்து செய்தார்கள். பலர் மற்றவர்களை போல மோடியும் பேசாமல் இருப்பான் என்று நினைத்தார்கள். விளைவுகளை சந்தித்தார்கள்.

 ·         உர்ஜித் படேல் அவர் பதவி விலகுவதற்கு 6-7 மாதங்களுக்கு முன்பாகவே தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறிவந்தார். அதை அவர் எழுத்து பூர்வமாகவும் அளித்துள்ளார். அதைத்தான் அவர் பின்னர் செய்தார்.இதில் அரசியல் நிர்பந்தம் ஏதுமில்லை. ரிசர்வ் வங்கியின் கவர்னராக அவர் சிறப்பாக பணியாற்றினார்.

 ·         நான் சேர்த்து வைத்திருக்கும் நல்ல நம்பிக்கையின் மீது நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். எங்களை பற்றி பொய் செய்திகளை பரப்பாமல் எப்படி எதிர்கட்சிகளால் கூட்டணி அமைக்க முடியும்? அதனால் தான் அப்படி செய்கிறார்கள். ஆனால், நான் மக்கள் தீர்ப்பையே மதிக்கிறேன்.

 ·         “மோடி மேஜிக் மறைந்துவிட்டது என்று சொல்லுபவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். ஆக, “மோடி மேஜிக் என்று ஏதோ ஒன்று இருந்ததாக அவர்கள் ஒப்புக்கொள்ளத்தானே செய்கிறார்கள்.

 ·         2018ம் ஆண்டு நம் நாட்டின் விளையாட்டுத்துறையின் பொற்காலமாக இருந்தது. நாட்டின் சிறு நகரங்களிலுருந்தும் சின்னசிறு கிராமங்களிலிருந்தும் குழந்தைகள் வெளியில் வந்து விளையாட்டில் தங்கள் முத்திரையை பதித்துள்ளார்கள்.

 ·         பாகிஸ்தான் வழிக்கு வர இன்னும் பல காலம் ஆகும். பாகிஸ்தான் மீது ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய போது நமது வீரர்களின் பாதுகாப்பை பற்றித்தான் நான் மிகவும் கவலைப்பட்டேன்.அதற்காக இரண்டு முறை இந்த நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது. “வெற்றியோ தோல்வியோ சூரிய உதயத்திற்குள் திரும்பி விடுங்கள் என்பதே அவர்களுக்கான என் செய்தியாக இருந்தது.

 ·         “ராம ஜன்ம பூமி விவகாரம் தொடர்பாக நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருந்தோம் இந்த விவகாரத்திற்கு அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சுமூக தீர்வு எட்டப்படும் என்று.அதையே தான் இப்போதும் சொல்கிறேன்.

 ·         ‘மோடி மக்களின் அன்பு மற்றும் ஆசீர்வாதத்தின் உருவாக்கமே.