பீகார் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளை அடித்து நொறுக்கிய பயிற்சி காவலர்கள்

பீகார் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளை அடித்து நொறுக்கிய பயிற்சி காவலர்கள்

பீகார் தலைநகர் பாட்னாவில் சுமார் 400 பயிற்சி காவலர்கள் அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், போலீஸ் குடியிருப்பில் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களின் சக பயிற்சி போலீஸான சவிதா பதக் என்ற பெண் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தார். அவருக்கு நான்கு நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்த போதும் விடுப்பு அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு, அவர் கார்கில் ஸௌக் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

சவிதா இறந்ததை அறிந்த சக பயிற்சி போலீசார் விடுப்பு அளிக்காத டி.எஸ்.பி முகமது மச்லுதீன் மீது ஆத்திரம் கொண்டனர். அவரை அவர் வீட்டிற்கே துரத்தி சென்று தாக்கினர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆத்திரம் அடங்காத பயிற்சி போலீஸார் காவலர் குடியிருப்பு பகுதியில் இருந்த வீடுகளையும், கடைகளையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். 

டி.எஸ்.பி அதிகாரத்தில் உள்ள பல போலீசார் தாக்கப்பட்டனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார மூன்று நாட்களுக்குள் இது குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி டி.எஸ்.பி திவேதிக்கு உத்திரவிட்டுள்ளார்.