புதிய தலைமைச்செயலகம் முறைகேடு : முடிந்தது வாதம் – தீர்ப்பு ஒத்திவைப்பு

புதிய தலைமைச்செயலகம் முறைகேடு : முடிந்தது வாதம் – தீர்ப்பு ஒத்திவைப்பு

புதிய தலைமைச்செயலகக் கட்டுமான முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக மற்றும் அரசு தரப்பு வாதங்கள் முடிந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

2006–11 திமுக ஆட்சிகாலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், புதிய தலைமைச் செயலகக் கட்டடம், பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியமைக்கப்பட்டது.

நீதிபதி ரகுபதி ஆணையம் விசாரணையை எதிர்த்து, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு, ஐகோர்ட்டில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க வேண்டும். ஆணையத்திடம் இருந்து வழக்கு ஆவணங்களை அரசு பெற்று, அவற்றைப் பரிசீலித்து, முகாந்திரம் இருந்தால் குற்றவியல்  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஆணையத்திடம் பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட்டு, தமிழக அரசு கடந்த செப்.24ல் அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலினும் பொருளாளர் துரைமுருகனும், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் முன்வைத்த இறுதி வாதம்:
நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்கவும், வழக்கு ஆவணங்களைப் பரிசீலித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் ஆகஸ்ட் 3ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை உறுதிசெய்து, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இறுதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படியே, இந்த புகார் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றப்பட்டது.

குற்றவியல் நடவடிக்கைக்கு நீதிபதி உத்தரவிட்ட நிலையில், விசாரணைக்கு மட்டுமே அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் கிடைக்கும் முடிவின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும்.

இப்போது, விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால், யார் மீதும் குற்றம்சாட்டவில்லை. புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ரூ.629 கோடி முறைகேடு நடந்ததாகப் புகார் உள்ளது. எனவே, இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட முடியாது.

லஞ்சஒழிப்புத்துறையின் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நிலையில், விசாரணையே கூடாது என்று எதிர்க்க முடியாது. எனவே, எதிர்ப்பு மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல. அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார். 

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் தனது இறுதிவாதத்தில், ‘லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அரசு உத்தரவிட்டதும், அதன் அடிப்படையில் லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ததும் சட்டப்படி தவறானது. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களும் முடிந்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.