போருக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

போருக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக இந்திய பாதுகாப்புப் படையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில்  புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பாக்., ராணுவம் போருக்காக தங்களை தயார்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம், பலோசிஸ்தான் நிர்வாகம் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ள கடிதம் பாக்., போருக்கு தயாராகி வருவதை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்தியா பதிலடி கொடுக்கும் என்ற அச்சம் காரணமாக பிப்.,17 ம் தேதியே எல்லை பகுதியை ஒட்டிய பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் வேறு இடங்களுக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்திய படைகள் தாக்குதல் நடத்த சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகள் பதுங்கிடங்களை பாக்., மாற்றி உள்ளது. இந்தியாவுடன் பாக்., போருக்கு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் எந்த அழுத்தத்திற்கும் அடிபணிந்து விடக் கூடாது என பாக்., அரசை ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.