மக்களவைத் தேர்தல் - வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்

மக்களவைத் தேர்தல் - வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்

வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிட்ட நரேந்திர மோடி, 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ள பிரதமர் மோடி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர்.

இதனிடையே வாராணசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் களம் காண்கிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வாராணசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டவர். அப்போது மோடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை அடுத்து மூன்றாவது இடத்தை அஜய் ராய் பிடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.