மத்தியஸ்தர் குழு முன் மனுதாரர்கள் ஆஜர் - அயோத்தி விவகாரம்

மத்தியஸ்தர் குழு முன் மனுதாரர்கள் ஆஜர் - அயோத்தி விவகாரம்

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய தரப்புகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதிகட்ட விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் விரைவில் தொடங்கவுள்ளது. 

அதற்குள் இந்த விவகாரத்துக்கு மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திய நீதிமன்றம், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழுவை அமைத்தது. அதில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், மத்தியஸ்தர் குழு தனது பணியை உத்தரப் பிரதேசத்தின் ஃபைசாபாத் மாவட்டத்தில் உள்ள அவத் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இந்த வழக்கின் மனுதாரர்கள் அனைவரும் தங்களது வழக்குரைஞர்களுடன் மத்தியஸ்தர் குழு முன் ஆஜராகினர். 

இந்த மத்தியஸ்த கூட்டத்தில், உத்தரப் பிரதேச மாநில அரசின் தலைமை வழக்குரைஞர் ராகவேந்திர சிங், அரசு கூடுதல் வழக்குரைஞர் மதன் மோகன் பாண்டே, நிர்மோஹி அகாரா அமைப்பைச் சேர்ந்த மஹந்த் தினேந்திர தாஸ், ராம் லல்லா தரப்பில் திரிலோகி நாத் பாண்டே , சன்னி வக்ஃபு வாரிய உறுப்பினர்கள், ஹிந்து மகாசபையைச் சேர்ந்த சுவாமி சக்ரபாணி மற்றும் கமலேஷ் திவாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ராம் அபிராம் தாஸ் அமைப்பைச் சேர்ந்த மஹந்த் தரம் தாஸ், திகம்பர் அகாராவைச் சேர்ந்த மஹந்த் சுரேஷ் தாஸ், உத்தரப் பிரதேச ஷியா வக்ஃபு வாரியத் தலைவர் வாசீம் ரிஜ்வி, மனுதாரர்கள் இக்பால் அன்சாரி, முகமது உமர், ஹாஜி மஹ்பூப் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.