மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறையில், வெற்றி விநாயகர் கோயிலில் வழிபட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை காலை தொடங்கினார்.  

தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மெகா கூட்டணி, கொள்கை கூட்டணி. இந்தக் கூட்டணியைப் பார்த்துப் பயந்து நடுங்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதவாதக் கூட்டணி என விமர்சிக்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து, அமைச்சரவையில் இடம்பெற்ற போது, மதவாதக் கட்சியுடன் கூட்டணி என்பது அவருக்கு தெரியவில்லை. நாங்கள் கூட்டணி அமைத்த பிறகு தான் மதவாதக் கூட்டணி எனத் தெரிகிறது. திமுக கூட்டணியினர் மக்களை ஏமாற்றுகின்றனர். 15 ஆண்டுகள் திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், தமிழ்நாட்டுக்கு புதிய தொழிற்சாலைகள், திட்டங்கள், நிதியைக் கொண்டு வரவில்லை. திமுக வினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளைத் தீர்த்து வைக்கவில்லை. தி.மு.க.வினர் கிடைத்த வாய்ப்பை குடும்ப நலனுக்கே பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்தோடு, மக்கள் நலனைப் பற்றி சிந்திக்கும் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. நாட்டுக்கு நல்ல தலைவர் தேவை. எதிர்க்கட்சி கூட்டணியினர் இங்கே ஒன்றையும், வெளி மாநிலத்தில் வேறொன்றையும் பேசுகின்றனர். திமுக கொள்கையில்லாத கட்சி. பதவி சுகத்திற்காக உள்ள கட்சி. அதிமுக கொள்கையுடைய கட்சி. அண்டை நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக்காக்க வேண்டும். இதற்கு உறுதியான, நிலையான, வலுவான தலைமை வேண்டும். காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதமர் என்றே தெரியவில்லை. இவர்களால் எப்படி நல்ல ஆட்சியை அளிக்க முடியும்.