மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் - பிரதமர் திரு நரேந்திர மோடி

மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் - பிரதமர் திரு நரேந்திர மோடி

தேசத்தின் நலனுக்கு மத்தியில் மீண்டும் பெரும் பான்மை பலம் கொண்ட அரசு அமைவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜோ காரணம் கிடையாது. இதற்கான பெருமை, 30 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, நாட்டில் அமைந்துள்ள பெரும்பான்மை பலம் கொண்ட அரசையும், நாட்டு மக்களையுமே சேரும்.  இதே மக்களவையில்தான், பினாமி சொத்துகள் மற்றும் திவால் நிறுவனங்கள் தொடர்பான மசோதாக்கள், ஜிஎஸ்டி மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. மக்களவையின் தீவிர பணிகளால்தான், உலக அளவில் இந்தியா 6ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. 5 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார சக்தி என்ற நிலையை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது.

மக்களவையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் எம்.பிக்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு தனது பாராட்டுகளை மோடி தெரிவித்து கொண்டார். நாட்டின் பிரதமராக தாம் மீண்டும் வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்த சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங்குக்கும் தனது நன்றியை மோடி தெரிவித்தார்.