மத்திய அமைச்சர் அனந்த் குமார் மறைந்தார்

மத்திய அமைச்சர் அனந்த் குமார் மறைந்தார்

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரும் கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான அனந்த் குமார் இன்று அதிகாலையில் பெங்களூருவில் புற்று நோயால் காலமானார். ஜே.எஸ்.எஸ் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பில் இணைந்த அவர் எமர்ஜென்சி காலத்தில் அதற்கு எதிரான போராட்டங்களில் முக்கிய பங்காற்றினார்.

59 வயதான ஆனந்த் குமார் தனது 37வயதிலேயே பெங்களூரு தெற்கு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் தொடர்ந்து ஐந்து முறை அந்த தொகுதியிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி வரை அந்த தொகுதியை தக்கவைத்து கொண்டவர் என்ற பெருமையை உடையவர்.

1998ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் விமான போக்குவரத்து துறை அமைச்சாராக நியமிக்கப்பட்டார். அப்போது அவரது முயற்சியால் தான் பெங்களூருவில் சர்வ தேச விமான நிலையம் அமைந்தது. 

அனந்த் குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.கர்நாடக அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.