மத போதகரை கொன்ற பழங்குடியினர்

மத போதகரை கொன்ற பழங்குடியினர்

அந்தமான் நிக்கோபார் தீவு கூட்டங்களில் சில தீவுகளில் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள விரும்பாமல் சில பூர்வ குடிகள் வாழ்கின்றனர். அவர்களுள் செண்டின்லினிஸ் பூர்வ குடிகளும் ஒரு வகையினர். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். தங்கள் தீவிற்கு வருபவர்களை கொன்றுவிடுவார்கள். 

அமெரிக்காவை சேர்ந்த 27 வயது மத போதகர் ஜான் ஆலன் சாவ் பல முறை அந்தமான் வந்துள்ளார். இவர்களை பற்றி கேள்விப்பட்டு இவர்களை மதம் மாற்ற விரும்பியுள்ளார். இதனை தனது உள்ளூர் நண்பரும் மற்றொரு மத போதகருமான அலெக்ஸ் என்பவரிடம் கூறியுள்ளார். அவர், அங்கு செல்வது ஆபத்தானது என்று கூறி தடுத்துள்ளார். ஆனால், ஜான் ஆலன் நவம்பர் 14ம் தேதி சில மீனவர்களின் உதவியுடன் அங்கு செல்ல முயன்றுள்ளார். அந்த முயற்சி வெற்றி பெறாததால் மீண்டும் சில மீனவர்களுடன் நவம்பர்  16ம் தேதி செண்டின்லினிஸ் தீவுகளுக்கு சென்றுள்ளார். மீனவர்கள் பாதி வழியிலேயே பயத்தில் பின் வாங்க அவர் மட்டும் ஒரு துடுப்பு படகில் தீவுகளை சென்றடைந்துள்ளார். 

அவர் அங்கு இறங்கியதுமே,அங்கிருந்த பூர்வகுடிகள் அவரை அம்புகளால் தாக்கி கொன்றுள்ளனர். இதை கடலில் இருந்த பார்த்த மீனவர்கள் உடனடியாக போர்ட் பிளேயர் வந்து அவரது நண்பர் அலெக்ஸ்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர் தில்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கும், அமெரிக்காவில் உள்ள ஜான் ஆலனின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்தமான் நிர்வாக அதிகார்கள் கூறுகையில்,"இந்த தீவுகளுக்கு போவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இறந்தவரின் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அங்கு இருக்கும் பூர்வ குடிகள் மிகவும் ஆபத்தனாவர்கள் ஆகையால் எச்சரிகையாக தான் அணுக வேண்டியுள்ளது." என்று கூறினர்.

மத போதகரை சட்ட விரோதமாக பழங்குடியினர் தீவிற்கு அழைத்து செல்ல முயன்றதாக 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.