மித்தாலி ராஜ் - பயிற்சியாளர் மோதல்

மித்தாலி ராஜ் - பயிற்சியாளர் மோதல்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நக்ஷத்திர வீராங்கனை மித்தாலி ராஜ்க்கும் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார்க்கும் மோதல் முற்றியுள்ளது. 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த கோப்பையை அதிக திறமை கொண்ட இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இதற்கு அணியின் நக்ஷத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் காரணமின்றி அன்றைய போட்டியிலிருந்து விலக்கப்பட்டது தான் காரணம் என்ற சர்ச்சை எழுந்தது. இது குறித்து மித்தாலி ராஜ், "எனது 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக மிகவும் மரியாதை குறைவாக நடத்தப்படுவதாக உணர்ந்தேன். என்னை திட்டமிட்டு புறக்கணித்தனர். அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்க்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பயிர்ச்சியாளர் ரமேஷ் பவார் என்னிடம் பாரபட்சமாக நடந்து கொண்டார். என்னை பலமுறை அவமானபடுத்தினார். சி.ஒ.ஏ உறுப்பினராக உள்ள முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். அவர் என்னை அணியில் சேர்க்காததற்குஆதரவாக இருப்பார் என்று எதிர்ப்பார்க்கவில்லை. இது அதிர்ச்சியளிக்கிறது." என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார்,"மித்தாலி ராஜின் மனப்பான்மை எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு அணியை விட தானே முக்கியமாகிவிட்டது. இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் நிறைய முரண்டு பிடித்து, நிறைய தொல்லை கொடுத்தார். அவர் பயிற்சியாளர்களை மிரட்டும், நிர்பந்திக்கும் குணத்தை விட்டுவிட்டு தன்னை விட அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணத்தை வளர்த்துக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்." என்று கூறினார்.

இதற்கு மித்தாலி ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில்,"என் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளால் மிகவும் காயப்பட்டுள்ளேன்.  என் இருபது வருட உழைப்பு, வியர்வை, என் நாட்டின் மீதும் கிரிக்கெட்டின் மீதும் நான் கொண்ட பிடிப்பு சந்தேகத்திற்கு இடமாகிவிட்டது. என் தேச பக்தியும் சந்தேகிக்கப்படுகிறது, என் திறமை கேள்விகளுக்குள்ளாக்கபடுகிறது, என் மீது புழுதி வாரி தூற்றப்படுகிறது.  என் வாழ்நாளின் கருப்பு நாள் இன்று. எனக்கு இறைவன் தான் சக்தியை தரவேண்டும்." என்று கூறியுள்ளார்.

மித்தாலி ராஜ்க்கும் பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் ;இடையேயான இந்த மோதல் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.