முப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா?

முப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா?

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு, 44 வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீத் ஆட்சியின் போது மாற்றப்பட்ட பாதுகாப்பு வாகன இயக்க விதிகளே காரணம் என கூறப்படுகிறது.

2002 ம் ஆண்டு முதல் 2005 வரை காஷ்மீரில் முப்தி முகம்மது சயீத் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அதற்கு முன்பு வரை, பாதுகாப்பு வீரர்களின் வாகனங்கள் செல்லும் போது அந்த வழியில், பொது மக்களின் வாகனங்கள் முற்றிலுமாக நிறுத்தப்படும். பாதுகாப்பு வீரர்கள் செல்லும் வாகனங்கள் அந்த இடத்தை கடந்த சென்ற பிறகே, பொதுமக்களின் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும்முப்தி முகம்மது ஆட்சிக்கு வந்த உடன், இந்த நடைமுறை பொது மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் எனவும், பாதுகாப்பு வாகன விதிமுறை என்ற பெயரில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த கொடுமையை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். முப்தி முகம்மதுவின் இந்த கோரிக்கையை ஏற்ற அப்போது காங்., தலைமையிலான மத்திய அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தியது.


பாதுகாப்பு வீரர்களின் வாகனங்கள் செல்லும் பாதையில் வெடிகுண்டுகள் உள்ளதா என சோதிக்க வேண்டும், பாதுகாப்பு வாகன பாதையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இல்லாமல் பார்த்து கொள்வதே ராணுவத்தின் பங்கு இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில வழிகாட்டு முறைகள் வகுக்கப்பட்டு, ராணுவ வீரர்களின் வாகனங்கள் செல்லும் போது பொதுமக்களின் வாகனங்களும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.


பாதுகாப்பு வீரர்கள் செல்லும் போது பொதுமக்களின் வாகனங்களும் செல்லலாம் என முப்தி முகம்மது கொள்கை விதிகளை மாற்றியதே தற்போது ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வழிவகுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.