மூன்று முக்கிய மசோதாக்கள்

மூன்று முக்கிய மசோதாக்கள்

பொருளாதார ரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா : 

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 323 வாக்குகளும் எதிராக 3 வாக்குகளும் பதிவாகின. 

இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் சுமார் நான்கரை மணி நேரம் நடைப்பெற்றது.  அப்போது சில உறுப்பினர்கள் ,"இந்த மசோதாவிற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கப்படலாம்."  என்று  கருத்து தெரிவித்தனர். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் ,"நிச்சயமாக இந்த சட்டம் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்." என்று கூறினார்.

"பொதுப்பிரிவினருக்கு ஏற்கனவே பல நலத்திட்டங்கள் உள்ளன. இந்த புது இட ஒதுக்கீடு தேவையில்லை." என்று மக்களவை துணை தலைவரும், அதிமுக உறுப்பினருமான மு.தம்பிதுரை கூறினார். 

"இது வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் என்ற எதிர்கட்சிகளின் குற்றசாட்டிற்கு பதிலளித்த சமூக நீதித்துறை அமைச்சர்.,"2014ம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்ற போதே நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றமும் உறுதி செய்யப்படும்." என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் படியே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார். 

"பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேறியிருப்பது வரலாற்று சிறப்பு மிக்கத்தருணம். இதன் மூலம் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நீதி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதி மற்றும் எந்த பாகுபாடுகளும் இல்லாமல் ஏழை மக்கள் சமூகத்தில் அனைத்து வாய்ப்புகளையும் பெற்று கௌரவத்துடன் வாழ்வதை உறுதிப்படுத்துவதே அரசின் நோக்கம் "  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா ஏழை எளிய குடும்பத்து இளைஞர்களுக்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பரிசு என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

திமுக மற்றும் இடது சாரி கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தன. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி இந்த மசோதாவிற்கு வரவேற்பு தெரிவிததுள்ளார்.

குடியுரிமை சட்ட மசோதா

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், பார்ஸிகள், பௌத்தர்கள், ஜைனர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா கடும் அமளிக்கிடையே நேற்று மக்களவையில் நிறைவேறியது.

இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்து, சமணர், சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்தியா தவிர செல்வதற்கு வேறு இடமில்லை. முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேரு உட்பட பல தலைவர்கள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த மசோதாவால் அஸ்ஸாம் மாநிலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த சுமையை எல்லா மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஆறு சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது." என்று கூறினார்.  எனினும், இந்த மசோதாவால் அதிருப்தி அடைந்த அஸ்ஸாம் கன பரிஷத் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.

டி.என்.ஏ சட்ட மசோதா :

மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று மக்களவையில் டி.என்.ஏ சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, "இந்த மசோதா மூலம் டி.என்.ஏ வங்கிகள் உருவாக்கவும் டி.என்.ஏ சோதனைகள் செய்யும் பரிசோதனை கூடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும் வழி ஏற்படுகிறது. குற்றவாளிகள், காணாமல் போனவர்களின்  உறவினர் தவிர மற்றவர்களின் டி.என்.ஏ மாதிரிகள் சம்பந்தப்பட்டோரின் அனுமதியோடு டி.என்.ஏ வங்கிகளில் சேமிக்கப்படும். இதனால், காணாமல் போனோர், அடையாளம் தெரியாமல் இறந்து போனோர், குற்றவாளிகள் என்று சந்தேகப்படபடுபவர்கள், விசாரணை கைதிகள் உள்ளிட்டோரை டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காண முடியும். இந்த மசோதா மூலம் உள்துறை, ராணுவம், வெளிவிவகாரத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை பயன் பெறும். "என்று  கூறினார்.

இந்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது.