மேடைக்கு மேடை உளறும் ராகுல் காந்தி

மேடைக்கு மேடை உளறும் ராகுல் காந்தி

      மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் தியோரி பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், மோடி மீது குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு சிந்தனையில்லாமல், வக்கிர புத்தியுடன் குற்றச்சாட்டுகளை மக்கள் முன் வைத்தார் ராகுல் காந்தி.  பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் நாடு விடுதலை பெற்ற பின் நடந்த மிகப் பெரிய ஊழல், என புலம்பியிருக்கிறார்.   உண்மையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக என்ன மாற்றங்கள் நிகழ்ந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இதில் ஊழல் நடைபெற்றதாக கூறும் ராகுல் காந்தி முன் வைக்கும் வாதம் விசித்திரமானதாக அமைந்துள்ளது.  பணக்காரர்கள் யாரும் வங்கி வாசலில் நிற்கவில்லை, ஏழைகள் மட்டுமே வங்கி வாசலில் நின்றார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு, ராகுல் காந்தியிடம் திருப்பி கேள்வி கேட்க தோன்றுகிறது.  காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் யார் யார் வங்கி வாசலில் நின்றார்கள் என்பதை கூற வேண்டும்.  விளம்பரத்திற்காக ராகுல் காந்தி வங்கி வாசலில் நின்றார், அவரது தாயார் அல்லது அவரது சகோதரி பிரியங்கா வதோரா வங்கி வாசலில் நின்றார்களா என்பதை விளக்க வேண்டும்.

                திருவாளர் ராகுல் காந்தியின் சிந்தனைக்கு சில தகவல்களை தெரிவித்து, அது பற்றிய கருத்துக்களை பதிய விட வேண்டும்.  பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த போது, பொருளாதார சூழ்நிலையும், பின்னர் ஏற்பட்ட சூழ்நிலையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.  தினசரி கூலி வேலை செய்யும் எவரும் வங்கியின் முன் நிற்கவில்லை.  தயவு செய்து எந்த காங்கிரஸ் கட்சியின் தலைவராவது, வங்கி வாசலில் நின்றார்களா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.  சென்னை விமான நிலையத்தில் ஒரு கப் காபியின் விலை ரூ 75 என்றவுடன், முதன் முதலில் விமானத்தில் பயணிக்கும் பயணியாக கேள்வி கேட்ட சிதம்பரம், சென்னை அல்லது டெல்லி அல்லது கானாடுகாத்தான் பகுதியில் உள்ள வங்கியில் நின்றாரா.   தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர்  அறந்தாங்கியில் உள்ள வங்கியில் பணம் பெற வரிசையில் நின்றாரா?  வாய்க்கு வந்தபடியெல்லாம் விமர்சனம் செய்வது தவறானது என்பதை அகில இந்திய கட்சியின் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்.   விமர்சனம் என்பதை மறந்து கொச்சையாக பொது மேடைகளில் பேசும் ராகுல் காந்தி, தனது கட்சியில் உள்ள எந்த பாராளுமன்ற உறுப்பினராவது வங்கி வாசலில் நின்றார்களா?   என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

 

         பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் நாடு விடுதலை பெற்ற பின் நடந்த மிகப் பெரிய ஊழல் என்ற குற்றச்சாட்டை வைக்கும் ராகுல் காந்தி, 1947லிருந்து இன்று வரை நடந்த ஊழல்கள் போல், லஞ்ச பணம் கைமாறி அந்நிய நாட்டில் முதலீடுகள்  செய்த சம்பவங்களை போல், பணமதிப்பிழப்பில் நடந்த ஊழல் என்ன என்பதை  விளக்க வேண்டும்.  பல லட்சம் கோடி கொள்ளையடித்த 2ஜி ஊழல்,  சுமார் 70,000 கோடி கொள்யைடித்த காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டு போட்டி,  நிலக்கரி ஊழல்,  நீர்முழ்கி கப்பல் வாங்கியதில் ஊழல்,  எந்த அம்பானியை குற்றம் சுமத்துகிறார்களே அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்யைடித்த கே.ஜி. பேசின் ஊழல்,  வளைகுடா நாடுகளில் கொள்ளையடித்த ஆயில்க்கு உணவு ஊழல், மாருதி நிறுவனத்தில் நடந்த மோசடி, நகர்வாலா ஊழல், ஹர்த் மேத்தா ஊழல், லக்குபாய் பகத் ஊறுகாய் ஊழல் போன்ற நாற்றமெடுத்த ஊழல்களை நடத்திய காங்கிரஸ் கட்சிக்கு, எதைப் பார்த்தாலும் ஊழல் மயமாகவே தெரிகிறது எனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஊழல் என கற்பனையில் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்.

       உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படுவது இந்தியாவில் முதன் முறையல்ல, உள்நாட்டுப் பொருளாதாரத்தை விழுங்கும் வகையில் ரொக்கப் பணம் பதுக்கப்படும்  போது, பணப் பதுக்கலை முறியடிக்க உயர் மதிப்பு நோட்டு செல்லாது என அறிவிப்பு வெளியாகும்.  1940-ல் ரூ1000 மற்றும் ரூ10000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.  1954-ல் நாடு விடுதலை பெற்ற பின்னர் 1954-ல் ரூ1000, 5000, 10000  புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டன.  1978-ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் ஜனவரி மாதம் 10ந் தேதி ரூ1000 , ரூ5000, ரூ10,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.  அப்பொழுது ஏற்படாத மாற்றம், தற்போது ஏற்பட்டுள்ளது.

       பணமதிப்பிழப்பு  நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட நல்ல விளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  அதற்கு முன் சில நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.  திருவாளர் ராகுல் காந்திக்கு ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுப் படுத்த வேண்டும்.  மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, ரிசர்வ் வங்கி உயர் மதிப்பு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது என ப.சிதம்பரம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.  ஆனால் உரிய நடவடிக்கை எடுக்க துணிவும் நேர்மையும் அப்பொதைய ஆட்சியாளர்களுக்கு கிடையாது.    உயர் மதிப்பு நோட்டுகள், நாட்டின் அன்றாட புழக்கத்துக்கு பயன்படுவதில்லை.  இதை பா.ஜ.க. மட்டும் கூறவில்லை, பிரபல பொருளாதார வல்லுநர் அஜித் வடேகர்  கூறியது.  திரு. எஸ்.குருமூர்த்தி அவர்கள் 25.12.2016ந் தேதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டதை தற்போது நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.  உயர் மதிப்பு நோட்டுகளின் எண்ணிக்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல மடங்காப் பெருகியது.  2004-ல் 34 சதவீதமாகவும், அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 79 சதவீதமாகவும், 2014-ல் ஆட்சியை விட்டு கீழே இறங்கும் போது 86 சதவீதமாகவும் உயர்ந்தது.  இதன் காரணமாக வேலை வாய்ப்பு உயராமல் ஊக வணிகம் பெருகியது என்றார்.

       2004லிருந்தே நமது நாட்டு பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பைப் உயர்த்துவதில் கவனத்தை செலுத்தாமல், சொத்துக்களின் அதாவது நிலம், தங்கம், பங்குச் சந்தை  மதிப்பில் போலியான வளர்ச்சிக் காட்டப்பட்டு வந்தது.  இது உயர் மதிப்பு நோட்டுகள் மேற்படி போலியான வளர்ச்சிக்கு முதலீடு செய்யப்பட்டது.  இதன் காரணமாகவே, ஊழல் பேர்வழிகளும், மோசடி பேர்வழிகளும், அதிக அளவில் நிலம், தங்கம் , பங்குச் சந்தையில் முதலீடு செய்ய துவங்கினார்கள்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வேலை வாய்ப்பு உருவாக்கிய விகிதாச்சாரம் என்ன என்பதை திருவாளர் ப.சிதம்பரமும், மன்மோகன் சிங் பேசுவதில்லை.   கொள்ளையடிக்கப்பட்ட பணம் நிலத்தில் முதலீடு செய்த காரணத்தால் ரியல் எஸ்டேட் வியாபாரம் 1000 மடங்கு மேல் நிலத்தின் மதிப்பு கூடுதலானது.   கணக்கில் வராத பணம் அதிக அளவில் தொடர்ந்து புழங்குவதும், தங்கம், நிலம் மற்றும் பங்கு சந்தையின் குறீயிட்டு எண் உயர்வதும்  நீண்ட காலத்தில் பொருளாதாரச் சீரழிவுக்கு வழி வகுக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.   எனவே தான் பணவீக்கத்தையும், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளின் பதுக்கலை முறியடிக்கவும் கொண்டு வந்தது உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு.  

       உண்மையில் சில விஷயங்கள் ராகுல் காந்திக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஏன் என்றால் உலகம் சுற்றும் வாலிபனாக மாறியதால் ஏற்பட்ட விளைவு.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004-ல்  ஆட்சிக்கு வந்த போது, ரூ 1000 நோட்டுகளின் மதிப்பு ரூ42 ஆயிரம் கோடியாகவும், ரூ500 நோட்டுகளின் மதிப்பு ரூ1.53 ஆயிரம் கோடியகவும் இருந்தது.  அப்பொழுது நாட்டின் ஒட்டுமொத்த ரொக்கப் பணத்தின் மதிப்பு ரூ3.68 லட்சம் கோடி மட்டுமே.  இதில் உயர் மதிப்பு நோட்டின் மதிப்பு 53 சதவீதம்.  இதுவே 2015-ல் ரூ1000 மற்றும் ரூ500 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ16.42 லட்சம் கோடி ஒட்டு மொத்த ரொக்க பணத்தின் மதிப்பில் 86 சதவீதமாக மாறியது.   2016க்கு பின்னர் உயர் மதிப்பு நோட்டுகளின் சதவீதம் மிக அதிக அளவில் உயர்ந்தது.  இதுவே பொருளாதாரத்தின் சீரழிவுக்கு காரணமாக அமைந்து விடும் என்பதும் வல்லுநர்களின் கருத்தாகும்.  இதை விட முக்கியமான காரணம் உயர் மதிப்பு நோட்டில் ரூ5 லட்சம் கோடி வங்கி கணக்குகளுக்குள் வராமலேயே பதுக்கப்பட்டுள்ளது என்பது ரிசர்வ் வங்கி தெரிவித்த தகலாகும்.

       திருவாளர் ராகுல் காந்திக்கு சில உண்மை நிகழ்வுகளை எடுத்துக் கூற வேண்டும்.  2016 நவம்பர் மாதம் 8ந் தேதி உயர் பணமதிப்பு நோட்டுகள் செல்லாது என அறவித்தவுடன்.  கால கெடு முடிந்தவுடன், ஒட்டு மொத்தமாக 15.44 லட்சம் கோடி ரூபாய் உயர் மதிப்பு நோட்டில், 14 லட்சம் கோடி வங்கிக்கு வந்து விட்டது என்பது முக்கியமான வெற்றியாகம்.   எவ்வாறு என்றால் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ2.5 லட்சத்திற்கு மேல் செலுத்தியவர்களின் கணக்குகள் தணிக்கைக்குட்படுத்தப்பட்டது.   வரி ஏய்ப்பு செய்திருந்தால் 45 சதவீத வரி விதிக்கப்படும் என தெரிவித்த காரணத்தால்,  சுமார் 20 கோடி பேர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.  இதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் கூடுதலாக கிடைத்தது.   மேலும் வங்கிகளில் 60 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்கில் ரூ7 லட்சம் கோடி இருப்பது உறுதியாகியுள்ளது.  இந்த வங்கிகளில் பணம் செலுத்திய பலர் தங்களது பணம் இல்லை என்ற தகவலும் வெளிவர துவங்கியுள்ளது.  சுமார் 35,000 கோடி ரூபாய் வங்கிகளில் டெப்பாஸிட் செய்யப்பட்டவர்கள் தங்களது பணம் இல்லை என தெரிவித்துள்ளார்கள்.  இதனாலும்  கருப்பு பணம் வெளி வர தொடங்கியுள்ளது.  

                1.75 லட்சம் டெபாஸிட் கணக்கு சந்தேகத்திற்குறிய வகையில் அமைந்துள்ளது.  வருமான வரி அலுவலர்கள் மேற்படி கணக்குகளை ஆய்வு செய்த வகையில் 18 லட்சம் கணக்குகளில் டெபாஸிட் செய்துள்ள பணம் வருமானத்திற்கு அதிகமான வகையில் வந்த தொகை என குறிப்பிட்டுள்ளார்கள்.   இரண்டு லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் வங்கிக்கு வந்துள்ளது.  வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் கூடியுள்ளது என்பதையும் கவனிக்க தவறிய ராகுல் காந்தி பொது மேடைகளில் தவறான கருத்தை பதிய விடுகிறார்.

       ஆண்டுக்கு ரூ7,000 கோடிக்கு மேல் கள்ள ரூபாய் நோட்டுகள் அண்டை  நாடான பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் கள்ளத்தனமாக கொண்டு வரப்படுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக கள்ள நோட்டுகள் புழகத்தில் விடுவது குறைந்துள்ளது.  பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத, பிரிவினைவாத அமைப்புகளுக்க ஹவாலா மூலம் வந்த நிதியும் தடுக்கப்பட்டுள்ளது.  இதுவும் அரசுக்கு கிடைத்த வெற்றியாகும்.   இடதுசாரி அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பும் இந்து நாளிதழ்,  மாவோயிஸ்ட்களிடமிருந்த 700 கோடி ரூபாய் செல்லாததாக மாறியதால், பெரும் பிரச்சினைக்குள்ளாகியுள்ளார்கள் என குறிப்பிட்டிருந்தது.  2016 நவம்பர் மாதத்திற்கு பின்னர் காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் குறைந்துள்ளன என்பதை கூட தெரிந்து கொள்ளாத ஒருவர் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர்.

பாவம், எதை சொல்லி அவரால் ஓட்டு கேட்க முடியும்?

-ஈரோடு சரவணன்.