மேற்கு வங்கத்தில் மத்திய படை பாதுகாப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

மேற்கு வங்கத்தில் மத்திய படை பாதுகாப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

மேற்கு வங்கத்தில், வருகிற, 6ல் நடைபெறவுள்ள, ஐந்தாம் கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, மாநில படைகள் அல்லாமல், மத்திய பாதுகாப்பு படையினர் மட்டுமே, ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்தில், ஏப்., 11ல் துவங்கி, மே 19 வரை, ஏழு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இங்கு, இதுவரை நடைபெற்ற நான்கு கட்ட ஓட்டுப்பதிவின் போது, பல்வேறு மாவட்டங்களில், வன்முறை சம்பவங்கள் வெடித்தன. கடந்த, 29ல் நடைபெற்ற நான்காம் கட்ட ஓட்டுப்பதிவின் போது, அசன்சோல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, பாராபனி ஓட்டுச்சாவடியை, திரிணமுல் காங்., தொண்டர்கள்சூறையாடினர்.மத்திய அமைச்சரும், பா.ஜ., - எம்.பி.,யுமான பபுல் சுப்ரியோவின் வாகனம், அடித்து நொறுக்கப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில், பா.ஜ., தலைவர்கள் புகார் அளித்தனர்.மேற்கு வங்கத்தில் நடைபெறும் ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவின் போது, மத்திய பாதுகாப்பு படையினரை நியமிக்குமாறு, கோரிக்கை வைத்தனர்.இது குறித்து, மேற்கு வங்கத்துக்கான, தேர்தல் சிறப்பு அதிகாரி விவேக் துாபே, செய்தியாளர்களிடம் கூறியதாவது:ரோந்து படையினர்மேற்கு வங்கத்தில், வருகிற, 6ல், ஐந்தாம் கட்ட லோக்சபா தேர்தல் நடக்கிறது. அப்போது, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மத்திய பாதுகாப்பு படையினர் மட்டுமே, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மாநில போலீசாரை, பாதுகாப்புக்கு பயன்படுத்தப்போவதில்லை. மொத்தம், 578 கம்பெனி படையினரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தவிர, 142 ரோந்து படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.