மோடிக்கு ஆதரவளிக்கக் கோரும் 900 திரைக்கலைஞர்கள்

மோடிக்கு ஆதரவளிக்கக் கோரும் 900 திரைக்கலைஞர்கள்

கடந்த ஐந்து ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஊழலற்ற வெளிப்படைத் தன்மை கொண்ட அரசின் சாயலைக் கண்டோம். இனிமேலும் அது தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்’ என சுமார் 900 திரைக்கலைஞர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதோடு தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்காக ஓட்டுக் கேட்டு மக்களிடையேயும் கேன்வாஸ் செய்து வாக்குச் சேகரித்து வருகின்றனர். அவர்களில் பலர் பாடகர்கள், பாரம்பர்ய நடனக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், கதாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள் மற்றும் தியேட்டர் ஆர்டிஸ்டுகளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

தங்களது ஆதரவுக்கு அவர்கள் தெரிவிக்கும் காரணம் என்னவென்றால் நாட்டு மக்களுக்குத் தற்போதைய உடனடித் தேவை ஒரு ‘வலிமை மிகுந்த அரசாங்கமே தவிர உதவியற்ற வலிமை குன்றிய அரசாங்கம் அல்ல’ அப்படியான ஆட்சியைத் தர மோடியால் மட்டுமே முடியும். இது எங்களது சொந்த முடிவு, மோடி தலைமையிலான பாஜகவுக்கு ஆதரவளிக்கச் சொல்லி எங்களை யாரும் வற்புறுத்தவில்லை என்றும் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அவர்களில் முக்கிய பிரபலங்கள் பண்டிட் ஜஸ்ராஜ், விவேக் ஓபராய், ரீட்டா கங்குலி, நஸ்ரூதீன் ஷா, அனுராதா பட்வால், ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், கொய்னா மித்ரா, பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட நாடறிந்த பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.