மோடியை விட சிறந்த தலைவர் ஸ்டாலின்  - சிறந்த காமெடி – பகுதி 1

மோடியை விட சிறந்த தலைவர் ஸ்டாலின் - சிறந்த காமெடி – பகுதி 1

     மத்தியில் பா.ஜ.க. அரசை குறிப்பாக மோடியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, முதலில் ராகுல் காந்தியின் முயற்சி பலிக்கவில்லை.  தற்போது ஆந்திர முதல்வர் திருவாளர் சந்திரபாபு நாயுடு முயற்சி எடுத்துள்ளார்.  இதன் ஒரு பகுதியாக தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலினை சந்தித்தித்து பேசிய போது, உதிர்த்த முத்து மோடியை விட சிறந்த தலைவர் ஸ்டாலின் என்றார்.  2018-ம் வருட இறுதியில் உதிர்த்துள்ள சிறந்த காமெடியான வாக்கியம்.  எந்த விதத்தில் ஸ்டாலின் சிறந்த தலைவர் என விவரிக்கவில்லை.   தமிழகத்தின் பெருமைகளை சிதைத்தவர்களின் தி.மு.க.வின் கருணாநிதியும் ஒருவர் என்பதை மறந்து விடக் கூடாது.  மோடியின் ஆட்சியை விட எந்த வகையில் தி.மு.க.வின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றது என்பதையும் சற்றே விலாவாரியாக விவாதிக்க வேண்டும். 

      மோடியைப் பற்றி விமர்சனம் எழும் போது, வைக்கும் குற்றச்சாட்டு, மாநில உரிமைகளை பறிக்கிறார், சர்வாதிகாரியாக திகழ்கிறார்,  பண மதிப்பிழப்பிட்டின் காரணமாக பலர் மரணமடைந்துள்ளார்கள்,  சிறு, குறு, தொழில்கள் நாசமடைந்துள்ளன என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.  இவையெல்லாம், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மிகப் பெரிய வளர்ச்சியடைந்ததா என்பதையும் பார்க்க வேண்டும்.  1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததது.  ஒரு வருடம் சி.என்.அண்ணாதுரை முதல்வராக ஆட்சியிலிருந்தார், அவரது கால மரணத்திற்கு பின்னர் மு.கருணாநிதி முதலவராக வலம் வர துவங்கினார்.  திருவாளர் கருணாநிதி முதல்வரான பின்னர், தமிழத்தின் வளர்ச்சி என்பது அவரது குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சி என்றால் மிகையாகாது.  எல்லாதுறைகளிலும் முறைகேடுகள், ஊழல்கள் நர்த்தனம் ஆட துவங்கியது.   இன்று தி.மு.க.விற்கு வக்கலாத்து வாங்கும் சந்திரபாபு நாயுடுக்கு சில கேள்விகள் கேட்க தோன்றுகின்றன.

      தி.மு.க.வைப் பற்றிய விமர்சனங்களை வைத்தவர்களே இப்பொழுது தி.மு.க.வுடன் கூட்டு சேர துடிப்பது ஏன், மக்களை காக்கவா அல்லது அதிகாரத்தை கைப்பற்றி கொள்ளையடிக்கவா?    மாநில உரிமைகள் மோடி ஆட்சியில் பறிக்கப்படுவதாக கூப்பாடு போடும் ஸ்டாலின் கவனத்துக்கு, திராவிடர்களின் கருத்தை அறியாமலும், திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியினரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்டதாகக் கூறி இந்திய அரசியல் சட்டத்தை கண்டித்து வந்த தி.மு.கழகம் தன் எதிர்ப்பின் அறிகுறியாகத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது,  இந்த கொள்கை முடிவு 1949-ல் எடுக்கப்பட்டது,  அதன் பின் பல தேர்தல்களை சந்தித்த தி.மு.க. எப்பொழுதாவது மேலே காணப்பட்ட கருத்தை வலியுறுத்தியதா என்றால் இல்லை.  அடல் பிகாரி வாஜ்பாயி பிரதமராக இருந்த போது, அரசியல் அமைப்பு சட்ட மறு சீராய்வு நடத்த நீதிபதி வெங்கடாலய்யா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.  இந்த குழுவிற்கு முதல் எதிர்ப்பு தெரிவித்தவர் கருணாநிதி, தலித்தலைவர் அம்பேத்காரின் கனவு சிதைக்கப்படும் என விமர்சனம் செய்தார் அவர்.  இவர்கள் தான் மாநில உரிமையைப் பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள்.   மாநில சுயாட்சிக்காக நீதிபதி ராஜமன்னார் தலைமையில் அமைத்த குழுவின் பரிந்துரையை எப்போதாவது, தி.மு.க. மத்தியில் கூட்டணியிலிருக்கும் போது, பிரதமரிடம் விவாதித்தது உண்டா அல்லது சட்ட துறை அமைச்சர் பதவியை கேட்டதுண்டா, இந்திரா காந்தியிடம் சர்க்காரியா கமிஷன் பரிந்துரையின் படி வழக்கு தொடுக்க வேண்டாம் என கோரிய கருணாநிதி, மாநில சுயாட்சியை பற்றி ஏன் கேட்கவில்லை? என்பதற்கு  ஸ்டாலின் பதில் கூறுவாரா என்பதையும் இத்தருணத்தில் கேள்வி கேட்க தோன்றுகிறது.   இம் மாதிரியான கொள்கை பல்டியடித்த வரலாறு நிறைய உண்டு.  இப்படிப்பட்ட கட்சியின் தலைவர் மோடியை விட உயர்ந்தவர் என புகழாராம் சூட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

      ஊழலின் மொத்த உருவம் தி.மு.க. ஊழலை அரசுடமையாக்கிய கட்சி தி.மு.க.   இன்று சர்க்காரியா என்றால் பயம் கொள்ளும் தி.மு.க.வினர்.  சர்க்காரியா கமிஷன் அறிக்கை, தி.மு.க. ஆட்சி நடத்திய லட்சணம் தெரிந்து விடும்.  என்பதற்காக அந்த அறிக்கையின் நகல்கள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.   ஸ்டாலின் வளர்ந்த கட்சியின் லட்சணம் என்ன என்பதை பார்க்க வேண்டும்.  வரதராஜப் பிள்ளை அடுத்தவரின் சொத்தை அபகரிக்க தி.மு.க. அரசு சட்ட திருத்தத்தை செய்ததும்,  அவருக்கே அவர் நிர்ணயத்த விலைக்கே கிடைக்க இரண்டாவது சட்ட திருத்தம் செய்ததும், அதிகார துஷ்பிரயோகம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  மாறாக சர்க்காரியா தனது அறிக்கையில், முதல் திருத்தத்தின் விளைவாகத் தனது நோக்கம் ஈடேற முடியாத வரதராஜப் பிள்ளைக்காகவே தி.மு.க. அரசு இரண்டாவது திருத்தமும் செய்யப்பட்டது  என குறிப்பிட்டு, இந்தச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து விவாதித்து நிறைவேற்றுவதில், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியும், உணவு, வருவாய்த்துறை அமைச்சர் ப.உ.சண்முகமும, சட்டத்துறை அமைச்சர் மாதவனும் வரதராஜப் பிள்ளைக்கு மறைமுகமாக உதவ வேண்டும் என்ற தீய நோக்கத்துக்காக உந்தப்பட்டிருக்கிறார்கள் என்றார்.  இம் மாதிரியான ஈனத்தனமான செயலை மோடி செய்யவில்லை எனவே மோடியை விட உயர்ந்தவர் ஸ்டாலின் என்பதில் சந்தேகம் கிடையாது.

      தி.மு.க. ஆட்சியில் நடந்த யூரியா ஊழல், கோதுமை பேர ஊழல். பூச்சி மருத்து தொளிப்பு ஊழல், தனது மகன் மு.க. முத்துவை சினிமாவில் நுழைக்க அதிகாரத்தை பயன்படுத்திய விவகாரம், மிகப் பெரிய மோடிசடியான வீராணம் திட்டம் இப்படி பல ஊழல்களில் திளைத்த தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் மோடியை விட சிறந்த தலைவர் என கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.   ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசும் ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகம் பட்ட பாட்டை சற்றே திரும்பி பார்க்க வேண்டும்.

                                                                                                     தொடரும்....

-    ஈரோடு சரவணன்