மோடியை விட சிறந்த தலைவர் ஸ்டாலின்  சிறந்த காமெடி – பகுதி 2

மோடியை விட சிறந்த தலைவர் ஸ்டாலின் சிறந்த காமெடி – பகுதி 2

தமிழகத்தை கடந்த ஐம்பதாண்டு காலமாக ஆண்டு வரும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சியில் கருத்து சுதந்தரம் பட்ட பாடு மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் பத்திரிக்கை சுதந்திரம் தி.மு.க. ஆட்சியில் தங்களின் கைப்பாவையாக மாற்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்கள்.  

     1971-ல் சேலத்தில் தி.க.வின் மாநாடும் பேரணியும் நடைபெற்றது.  இந்த பேரணியில் தான் தி.க.வினர் ராம பிரான் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், விநாயகரை செருப்பால் அடித்தும் ஊர்வாலம் சென்றார்கள்.  இந்த ஊர்வலத்தை படம் எடுத்து தனது பத்திரிக்கையின் நடுபக்கத்தில் வெளியிட்டதற்காக, துக்ளக் பத்திரிக்கை பறிமுதல் செய்யப்பட்டது.  துக்ளக் வெளியிட்ட புகைப்படத்தை இல்லஸ்டர்ட் வீக்லி என்ற ஆங்கில இதழ் வெளியிட்டதற்காக அவர்கள் மீது தி.மு.க ஆட்சியில் வழக்கு தொடுக்கப்பட்டது.   பல முறை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது,  பத்திரிக்கை அலுவலகத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.  பல இடங்களில் துக்ளக் பத்திரிக்கை தீயிட்டு கொழுத்தப்பட்டது.

       துக்ளக் பத்திரிக்கைக்கு ஏற்பட்டது போல்,  அலை ஓசை பத்திரிக்கையும் தாக்கப்பட்டது.  பத்திரிக்கை அலுவகம் அடித்து  நொறுக்கி அங்கே வேலை செய்த ஊழியர்கள் பட்ட பாடு சொல்லவே முடியாத ஒன்றாகும்.  பத்திரிக்கையின் பொறுப்பாளர் பாராளுமன்ற மேலவையின் உறுப்பினராக இருந்தும் வேலூர் நாராயணன் கடுமையாக தாக்கப்பட்டார்.   குமுதம்  வாரப் பத்திரிக்கை  கவனிக்கப்பட்ட விதமே வித்தியாமானதாக இருந்தது.   தி.மு.க. ஆட்சியில் சிறு,  சிறு  பத்திரிக்கைகள் அறவே ஒழிக்கப்பட்டதும்,  அதன் ஆசிரியர்களில் ஒரு சிலர் மேலோகம் அனுப்பப்பட்டதும் பழைய வரலாறு.  கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கை தீக்கதிரும் இந்த திருவிளையாடலுக்கு தப்பவில்லை.   ஆனால் இன்று மோடியை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, கீழ் வெண்மணி சம்பவத்தை மறந்து விட்டு, ஸ்டாலினுக்கு துதிபாடுவதும், சந்திரபாபு நாயுடுவிற்கு வெண்சாமரம் வீசுவதும் காம்ரேட்டுகளின் வாழ்வாதாரமாக மாறிவிட்டது.

      தி.மு.க. ஆட்சியில் தங்களுக்கு பிடிக்காத பத்திரிக்கைகள் அரசு நூலகங்களில் வாங்குவது தடை செய்யப்பட்டது.  காலச்சுவடு பத்திரிக்கை தடுக்கப்பட்டது.  இதன் காரணமாக அந்த பத்திரிக்கை நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.  வழக்கில் நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு, கருத்து சுதந்திரத்தை அரசியல்வாதிகள் நினைத்தபடி காலில் போட்டு மிதித்துவிட முடியாது என்று கொடுக்கப்பட்டது.  செம்மொழி தொடர்பாக காலச்சுவடு 2008-ல் எழுதிய தலையங்கத்தால்  தடைவிதிக்க்பட்டது.  அதிகம் பேர் படிக்கும் பத்திரிகையாக இல்லை என்பதால் காலச்சுவடு நூலகங்களுக்கு  வாங்குவது தடை செய்யப்பட்து.  ஆனால் பொதுமக்களுக்கு பெயர் தெரியாத கனிமொழி, தாகூர் கல்விச் செய்தி, திரிசு முகம், அற்புத ஆலயமணி, எங்களுக்கு மகிழ்ச்சி போன்ற பத்திரிக்கைகள் நூலகங்களுக்கு வாங்கப்பட்டது என்பது சுட்டிக் காட்டிய பின்னர் தான் அனுமதி வழங்கப்பட்டது.    1971-ல் தி.க.வின் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த காரணத்தினால், தினமணி மற்றும் சுதேசமித்திரன் பத்திரிக்கை தாக்கப்பட்டது.

      ஆகவே தமிழகத்தில் தி.மு.க.வின் ஆட்சியில் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட விதம் வன்முறையின் மூலமாகவே செயல்படுத்தப்பட்டது.  தினமணி, அன்றைய சுதேசமித்திரன்,  தி ஹி்நது போன்ற தினசரிகள் கூட இவர்களின் வன்முறை வெறியாட்டத்திலிருந்து தப்பவில்லை.      கருத்து சுதந்திரம் எவ்வாறு இருந்தது என்பதற்கு தி.மு.க.வின் பத்திரிக்கை முரசொலியில் வரும் கட்டுரை சாட்சியாகும்.   தி.மு.க. ஆட்சியில் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி விகடன் கட்டுரை எழுதியதற்காக,  தி்.மு.கழக ஆட்சியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பாப்பாத்தி  அம்மாளை அமர வைக்கவேண்டும் என துடியாய்த் துடிக்கின்றன அக்கிரகாரத்துப் பத்திரிக்கைகள் என சாதியை சொல்லி கீழ்தரமாக எழுதுவதை வாடிக்கையாக அமைத்து கொண்டது முரசொலி.   இம் மாதிரியான ஆட்சி செய்த தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் மோடியை விட உயர்ந்த தலைவர் என சந்திரபாபு நாயுடு புகழ்கிறார் என்றால் பிரதமர் பதவி படுத்தும் பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

      ஒருங்கிணைந்த ஆந்திரவாக இருந்த போது முதல்வராக இருந்தவர் சந்திரபாபுநாயுடு,  15.12.2013ந் தேதி செம்மரக் கடத்தல் சம்பந்தமாக இருவர் கொலை செய்யப்பட்டார்கள்.  இந்த கொலைக்கு காரணமானவர்கள் என ஆந்திர காவல் துறையினர் 454 பேர்களை கைது செய்யதார்கள், இவர்களில் 349 பேர்கள் தமிழர்கள்.  அப்பொழுது ஆந்திர மாநில முதல்வர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் கருணாநிதியும், வை.கோ மற்ற கூட்டணி கட்சியினர்.  இதை போலவே 7.4.2015ந் தேதி சேஷாசலம் பகுதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்டார்கள் என போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.  கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்ட கட்சி தி.மு.க.  இதை போலவே, பாலாறு பிரச்சினையில் ஆந்திராவில் தடுப்பணை கட்ட சந்திரபாபு நாயுடு முயலுகிறார் என்றும், இதன் காரணமாக வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என கூறி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள், இன்று மோடியை எதிர்க்க கூட்டு சேருவது வேடிக்கையானது.  இந்த கூட்டு, தமிழக மக்களின் நலனுக்கா அல்லது ஆந்திர மக்களின் நலனுக்கா என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும்.  பதவி ஆசை கனவில் மிதக்கும் ஸ்டாலின்,  பள்ளி நிர்வாகம், நகராட்சி மற்றம் ஊராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டிலிருந்ததை, மாற்றி மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த கட்சி எது?  நகராட்சி மற்றும் ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த தி.மு.க.  மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது என வசைபாடுவது வேடிக்கையானது.

      செம்மர கடத்ல் துப்பாக்கி சூடு சம்பவத்திலும், பாலாற்றில் பல தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்துத்தும் அறிக்கை மேல் அறிக்கை விட்ட தமிழ் அமைப்புகள், இதுவரை சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் பேச்சு வார்ததையைப் பற்றி எந்த ஒரு விமர்ச அறிக்கையும் விடவில்லை.  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, மோடியை எதிர்த்து பலூன் விட்ட பிரகஸ்பதிகள் எங்கே என தேட வேண்டிய நிலை உள்ளது.  மோடி கோ பேக் என கோஷமிட்ட வை.கோ. ஏன் ஸ்டாலிடம் விளக்கம் கேட்கவில்லை.  சீமானும், திருமுருகன் காந்தியும், அமீரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.  தமிழகத்தின் நலன் பற்றி வாய் கிழிய கத்தும் இந்த ஜந்துக்கள் எங்கே என தேட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.   செம்ர கடத்ல் துப்பாக்கி சூட்டில் பலியான இருபது பேர்களின் ஆவிகளும்,  எங்களின் உயிர்களை வைத்து அரசியல் செய்த நீங்கள் உங்கள் முன் வந்த முதல்வரிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை என கேட்டால் என்ன பதில் வைத்திருப்பார்கள் என தெரியவில்லை.

      ஆகவே மோடியை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஊழல் பேர்வழிகளும், பயங்கரவாத, பிரிவினைவாத ஆதரவாளர்களும்  ஒன்றிணைகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

-    ஈரோடு சரவணன்