யாரந்த புது தலைமையாசிரியர்?

யாரந்த புது தலைமையாசிரியர்?

இது இவ்வாறிருக்கையில்,

இந்தியாவில் ஒரு ஊரில்,

பாரதமாதா ஆரம்ப பள்ளியில்,

LKG ,Pre KG மாணவர்கள் சுமார் 100 பேர் உள்ள அரங்கில்,

பள்ளியின் தாளாளர் பேசுகிறார்....

"குழந்தைகளே !இந்த பள்ளியின் வழக்கப்படி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான உங்கள் தலைமை ஆசிரியரை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இரண்டு பேர் இதற்கான தேர்விற்கு வந்துள்ளார்கள்.முதலில் திரு,நடி என்பவர் உங்களுடன் உரையாடுவார்."

"என் அன்புள்ள குழந்தைகளே! நான் உங்களுக்கு தலைமை ஆசிரியராக இருக்க ஆசைப்படுகிறேன். உங்கள் கல்வியறிவும் பொது அறிவும் நடத்தைகளும் வெகுவாக முன்னேற நான் அயராது உழைப்பேன்.மேலும் இந்த பள்ளியின் தொடர்ந்த வளர்ச்சிக்கும் நான் பாடுபடுவேன்.இந்திய அளவில் இந்த பள்ளி முதன்மை இடம் பெற நான் திட்டங்கள் வகுத்து அவைகளை நிறைவேற்றுவேன்!"

"நீங்க எங்களுக்கு சாக்லேட் பிஸ்கோத்தெல்லாம் கொடுப்பீங்களா?"

"இல்லை கண்ணு.அது உனக்கு நல்லது இல்லை "

"அப்ப ஐஸ்க்ரீம்?"

"இல்லை நான் தின்பண்டங்கள் எதுவும் கொடுக்க மாட்டேன். மதியம் சத்துணவு சுவையானதாக அளிப்பேன்..உங்கள் ஆரோக்கியமும் என் பொறுப்புதான்"

"ஹோம் ஒர்க் குடுப்பீங்களா ?பரீட்சை வைப்பீங்களா?"

"ஆமாம் நிச்சயமாக!"

வேறு யாரும் கேள்வி கேட்காததால் தாளாளர் அடுத்த நபரை அழைக்கிறார்..

"குழந்தைகளே இவர் பெயர் திரு.ராதி "

"பெரியோர்களே! தாய்மார்களே! oopps சாரி! குழந்தைகளே! .நான் உங்களுக்கு தலைமை ஆசிரியராக இருக்க ஆசைப்படுகிறேன்.நான் இதுவரை எந்த பள்ளியிலும் ஆசிரியராக கூட இருந்ததில்லை மேலும் நானும் LKG UKG படித்துள்ளதால்
உங்க கஷ்டம் என்னவென்று எனக்குத் தெரியும்.நாம பள்ளியில் ஜாலியாக இருக்கலாம்.சாக்லேட் பிஸ்கோத்தெல்லாம் கொடுப்பேன்.ஐஸ்க்ரீம் இலவசமாக தருவேன்.பாடம் பரீட்சை எதுவும் கிடையாது.உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது."

குழந்தைகள் எந்த கேள்வியும் கேட்கவில்லை எனவே தாளாளர் இருவரையும் 15 நாட்களில் மீண்டும் வர சொல்லி இருக்கிறார்.குழந்தைகளை க்கேட்டு முடிவை சொல்வதற்காக!- ரங்கநாதன் கணேஷ்