ரஃபேல் விவகாரம், அவமதிப்பு வழக்கில்  ராகுல் காந்திக்கு நோட்டீஸ் -  விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரஃபேல் விவகாரம், அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் - விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தீர்ப்பு  குறித்த சீராய்வு மனு வழக்கில் கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களையும், நாளேடு ஆதாரங்களையும் ஏற்கலாம் எனத் தெரிவித்திருந்தது. விரைவில் ரஃபேல் விவகாரத்தில் விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தது.

அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துமுடித்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ரஃபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, " காவலாளி என கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது" என்று தெரிவித்தார். 

நீதிமன்றத்தின் உத்தரவை தனக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி பேசியது, தேசிய நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதனால், பாஜகவைச் சேர்ந்தவரும், டெல்லி எம்.பியுமான மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று திரித்து, அதற்கு அரசியல் சாயம் பூசி, தனிமனிதரான பிரதமர் மோடியை தாக்கிப் பேச பயன்படுத்தியுள்ளார். தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் ராகுல்காந்தி பயன்படுத்திய வார்த்தைகளை கூறவில்லை என  பாஜக எம்.பி. தொடர்ந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா  தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறுகையில், " இந்த நீதிமன்றத்தின் கருத்துக்களை, ஆய்வுகளை, கண்டுபிடிப்புகளை தெளிவாக நாங்கள் கூறியிருக்கிறோம். ஆனால், ராகுல் காந்தி நீதிமன்றத்தின் கருத்துக்களை தவறாக ஊடகங்களிடமும், மக்களிடம் எடுத்துரைத்துள்ளார்.

ராகுல் காந்தி கூறிய கருத்துக்களை ஒருபோதும் நீதிமன்றம் கூறவில்லை, அட்டர்னி ஜெனரல் ஆட்சேபம் தெரிவித்த குறிப்பிட்ட சில ஆவணங்களை சட்டரீதியாக ஏற்கலாம் என்றுதான் தெரிவித்தோம். ராகுல் காந்தி தனதுபேச்சுக்குக்கு உரிய விளக்கத்தை வரும் 22-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும், 23-ம் தேதி விசாரணைக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் " என உத்தரவிட்டார்.