ரஃபேல் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி

ரஃபேல் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி

ரஃபேல் விவகாரத்தில் காவலாளியைத் திருடன் என்று உச்ச நீதிமன்றமே ஒப்புக்கொண்டு விட்டது என்று கூறியதற்காக உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

நீதிமன்றத்தின் உத்தரவை தனக்கு ஏற்றாற்போல் ராகுல் காந்தி பேசியது, தேசிய நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதனால், பாஜகவைச் சேர்ந்தவரும், டெல்லி எம்.பி.யுமான மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா  தலைமையிலான அமர்வு முன் கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தாங்கள் ராகுல் காந்தி கூறிய கருத்துகளைப் போல் ஏதும் கூறவில்லை. ராகுல் காந்தி தனது பேச்சுக்கு உரிய விளக்கத்தை 23-ம் தேதிக்குள் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "ரஃபேல் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின்போது பிரச்சாரத்தில் இருந்தபோது பேசிவிட்டேன். ஆனால், தீர்ப்பின் சாராம்சம் தெரியாமல் பேசிய என்னுடைய வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டன. நீதிமன்றத்தின் உத்தரவுகளை, மாண்புகளை மதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. என்னுடைய வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டவைக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சய் கண்ணா தலைமையிலான அமர்வு ராகுல் காந்திக்கு அவமதிப்பு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டனர்.

கடந்த இருமுறை ராகுல் காந்தி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் வருத்தம் மட்டும் தெரிவிக்கப்பட்டது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில், மூன்றாவது முறையாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார் ராகுல் காந்தி.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 3 பக்கத்துக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள ராகுல் காந்தி, ''ரஃபேல் விவகாரத்தில் காவலாளியைத் திருடன் என்று உச்ச நீதிமன்றமே ஒப்புக்கொண்டு விட்டது என்று கூறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.