ராகுலுக்கு மீண்டும் நோட்டீஸ் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ராகுலுக்கு மீண்டும் நோட்டீஸ் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கோர்ட் அவமதிப்பு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் பதிலில் திருப்தியில்லை எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், அவருக்கு கிரிமினல் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. 

காங்., தலைவர், ராகுல், தன்னை நாட்டின் காவல்காரனாக கூறிக்கொள்ளும், பிரதமர் மோடி, ஒரு திருடன் என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது எனக்கூறியிருந்தார். கோர்ட் கூறாததை திரித்துக்கூறி, கோர்ட் அவமதிப்பு செய்துள்ளதாக, பா.ஜ., பெண் எம்.பி., மீனாட்சி லேகி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து பதில் அளிக்க ராகுலுக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்தரப்பு தவறுதலாக பயன்படுத்துகிறது. 

இதையடுத்து ராகுல் அளித்த பதில் மனுவில் நீதிமன்றத்துக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில், இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்தக் கருத்தை கூறியதற்காக, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ராகுல் சார்பில் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வியும், மீனாட்சி லேகி சார்பில் முகுல் ரோகத்ஹியும் ஆஜரானார்கள்.அப்போது, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ராகுலின் மன்னிப்பை ஏற்க மறுத்ததுடன், விளக்கம் அளிக்க வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை ஏற்க மறுத்து விசாரணையை ஏப்.,30க்கு ஒத்தி வைத்தனர்.