ராகுல்காந்தியின் ஆன்மீக பயணங்கள்  - சசிதரூர் விளக்கம்

ராகுல்காந்தியின் ஆன்மீக பயணங்கள் - சசிதரூர் விளக்கம்

சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில் எல்லாம் கோவில்களுக்கும் சென்று வழிபடுகிறார்.  அவரது இந்த திடீர் மாற்றம் ஆளும் பாஜகவினரால் கடுமையாக விமரிசிக்கப்படுகிறது. "அவர் இந்துக்களை தாஜா செய்வதற்காக இதையெல்லாம் செய்கிறார். அவர் இந்துவே இல்லை." என்றெல்லாம் பேச்சுக்கள் எழுகின்றன. இது போக ராகுல் காந்தியின் கோத்திரம் குறித்தும் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. ஆனால், ராகுல்காந்தியோ தன்னை மீண்டும் மீண்டும் ஒரு இந்து என்றும், தான் ஒரு காஷ்மீரி பிராமணன் என்று நிரூபித்துக்கொள்ள முனைகிறார்.

ராகுல்காந்தியின் தல யாத்திரைகள் குறித்து காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரும், திருவனந்தபுர நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் விளக்கமளித்துள்ளார். தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூர்,"நாங்கள் விடுதலை போராட்ட காலத்திலிருந்தே காங்கிரஸில் நேரு வழியிலான மத சார்பின்மையை பின்பற்றி வருகிறோம். அதனால், எங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளை பொதுவில் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பியதில்லை. ஆனால், இதை ஹிந்துக்களுக்கும், தெய்வ நம்பிக்கையில்லாதவர்களுக்கும் இடையேயான போரைப்போல் பாஜக சித்தரிப்பது சரியில்லை. சமய நம்பிக்கைகள் ஆழமாக வேருன்றி இருக்கும் ஒரு நாட்டில் இப்படி நடக்கும் போது நிச்சயம் மதசார்பற்றவர்கள் தோற்றுவிடுவார்கள். எனவே, எங்கள் நம்பிக்கைகளை வெளிகாட்ட வேண்டியதாகி விட்டது. ஆனால், எல்லோரையும் அரவணைத்து செல்லவே நாங்கள் விரும்புகிறோம்."

ராகுல்காந்தியின் தல யாத்திரைகள் குறித்து பதிலளித்த சசி தரூர். "இதை சந்தர்ப்பவாதம் என்று குறை காணுவது சரியில்லை. ராகுல் தன்னை சிவ பக்தன் என்று கூறி கொள்ளுவதற்கு முன் அதை பற்றி நன்றாகவே அறிந்திருக்கிறார். அவர் கோவில்களுக்கு செல்வது புகைப்படம் எடுக்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே நான் அவரிடம் சமயம் மற்றும் ஆன்மிகம் தொடர்பாக பேசியிருக்கிறேன். அவர் ஆன்மிகம் மற்றும் சமயம் தொடர்பான ஆழ்ந்த சிந்தனைகளும் அதிகம் படித்த இந்தியர்களுள் ஒருவர்." என்று கூறினார்.