ராமஜென்ம பூமிக்கு ஏன் உரிமைகோர முடியாது - சீரிய சுப்ரீம் கோர்ட்

ராமஜென்ம பூமிக்கு ஏன் உரிமைகோர முடியாது - சீரிய சுப்ரீம் கோர்ட்

ஒருவருக்கு சொத்துரிமை இருப்பதுபோல், ராமர் பிறந்த இடத்துக்கு ஏன் சட்ட ரீதியிலான சொத்துரிமை இருக்கக் கூடாது என்று ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், முஸ்லிம் தரப்பினரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் 23-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராமர் பிறந்த இடத்தை ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி மூலவர் ராம் லல்லா, தியாகி நந்தன் அகர்வால் என்பவர் மூலமாக மனு தாக்கல் செய்தது குறித்து விவாதம் நடைபெற்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி வக்ஃபு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான் கூறியதாவது:

கடந்த 1989-ஆம் ஆண்டில் முதல் முறையாக, ஒருவரது பிறப்பிடத்தை ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு மனு தாக்கல் செய்வதைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

புராணங்கள், மதம் சார்ந்த நூல்களின் அடிப்படையில் ராமர் இங்குதான் பிறந்தார் என்பதையும் ஏற்க முடியாது என்றார் அவர்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ராமர், அயோத்தியில்தான் பிறந்தார் என்ற நம்பிக்கை வேரூன்றி உள்ளது. இது சரியா, தவறா என்பதை ஹிந்துத்துவ கொள்கையின் மூலமே அறிய முடியும். இருப்பினும் சட்டப்பூர்வமாக அந்தஸ்து பெற்றுள்ளது. அப்படியிருக்கும்போது, ராமர் பிறந்த இடத்துக்கு ஏன் சட்டப்பூர்வ உரிமை இருக்கக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பதிலளிக்க முடியாத அளவுக்கு நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள் என்று ராஜீவ் தவான் பதிலளித்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற வாதங்களுக்குப் பிறகு, வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் 16-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.