வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில், அதிக அளவிலான மக்கள் வாக்களிக்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அதிக அளவிலான மக்கள் வாக்களித்தால், அது வலிமையான ஜனநாயக அரசை உருவாக்கும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி சுட்டுரை வழியாக வேண்டுகோள் விடுத்தார். 

திரைத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து விருதுகளை பெறும் நீங்கள், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு வாக்களிப்பதுதான் சரியான வழி என்பதை மக்களிடத்தில் தெரியப்படுத்துங்கள் என்று மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, ஹிந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாரூக் கான், அமீர் கான், கரண் ஜோஹர், நடிகைகள் தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோருக்கு வேண்டுகோள் விடுத்தார். 

இதனிடையே, தொழிலதிபர்கள் ரத்தன் டாடா மற்றும் விளையாட்டு துறையைச் சேர்ந்தவர்களான பி.வி. சிந்து, சானியா மிர்சா உள்ளிட்டோரிடமும் வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.