விமானப்படை தாக்குதல் - 7 பேருக்கு மட்டும் தெரிந்த ரகசியம்

விமானப்படை தாக்குதல் - 7 பேருக்கு மட்டும் தெரிந்த ரகசியம்

பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தகர்த்துள்ள நிலையில் இந்த தாக்குதல் திட்டம் பிரதமர் மோடி உட்பட 7 பேருக்கு மட்டுமே முன்கூட்டியே தெரியும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பாலகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. இந்தநிலையில் தாக்குதல் திட்டமிடப்பட்டது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் திட்டம் வெகு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 

அதன்படி தாக்குதல் திட்டத்தை வகுத்த ராணுவ அதிகாரிகள் அவர்களை தவிர மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக இதனை மேற்கொண்டுள்ளனர். இதுபற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மூலமாக பிரதமர் மோடியிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

பின்னர் ராணுவத்தின் முப்படை தளபதிகள், ரா உட்பட உளவுப்பிரிவின் பொறுப்பாளர்களுக்கு மட்டுமே தாக்குதல் திட்டம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் திட்டத்தை வகுத்த விமானப்படை தளபதிகள் தவிர மொத்தத்தில் வெளி நபர்கள் 7 பேருக்கு மட்டுமே தாக்குதல் திட்டம், நேரம் குறித்த தகவல்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளன.