வெப்சைட்டில் கோயில் சொத்துகள், மனுக்கள்!

வெப்சைட்டில் கோயில் சொத்துகள், மனுக்கள்!

கோயில் சொத்து குத்தகை பற்றிய முழு விவரங்களையும், குத்தகை நிலுவை வைத்திருப்பவர்கள், சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றி, மீட்பு நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும் என்று, ஐகோர்ட் கடந்த மாதம் 31ம் தேதி உத்தரவிட்டது. இதன்படியான நடவடிக்கைகளை, தமிழக அரசு இப்போது தொடங்கியுள்ளது.

சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இணையதள வசதி பயன்பாட்டை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்று (நவ.16) தொடங்கிவைத்தார். அமைச்சர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. கோயில்கள் தொடர்பாக முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்பி, துறை செயலர், கமிஷனர் ஆகியோருக்கு ஏராளமான கோரிக்கை மனுக்கள் வருகின்றன. இதுவரை, இந்த மனுக்களை கண்காணிக்கவும், அவற்றின் மீதான நடவடிக்கைகளை வேகமாக்குவதற்கும், தனிப்பட்ட மின்னணு கண்காணிப்பு இருக்கவில்லை. இதற்காக, இப்போது http.//gdp.in.gov.in என்ற இணையதளப் பயன்பாடு  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள், விரைவாகவும் உரிய முறையிலும் தீர்வு செய்யப்படுவது உறுதிசெய்யப்படும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் தீர்வு, மனுதாரருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். மனுதாரர்கள், தங்களது மனுக்களின் நிலவரம் குறித்த தகவலையும், இதே இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும்.
திருக்கோயில்கள் மற்றும் அவற்றிற்குச் சொந்தமான சொத்துக்களைக் கண்டறிந்து, துல்லியமான பட்டியல் தயார் செய்து, ஜிபிஎஸ் கருவி மூலம் பூகோள அமைவிடக் குறிப்பு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ‘தமிழ்நிலம்’ மென்பொருளை, தேசியத் தகவல் மையம் மூலம் புவியியல் தகவமைப்பு தயாரித்து வழங்கியுள்ளது. இந்த மென்பொருள் மூலம், திருக்கோயில் சொத்துகள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். முதல்கட்டமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களின் சொத்துக்களைப் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.