வேதாரண்யம் பகுதியில் ‘கஜா பேரிடர் மறுவாழ்வு திட்டம் தேவை : ராமதாஸ்

வேதாரண்யம் பகுதியில் ‘கஜா பேரிடர் மறுவாழ்வு திட்டம் தேவை : ராமதாஸ்

'கஜா' புயலால் நாகைப்பட்டினம் வேதாரண்யம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கஜா புயலின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான வேதாரண்யம் உருக்குலைந்து போயிருக்கிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிகளும் புயலால் புரட்டிப் போடப்பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் கூடுதலான மரங்கள் வேருடன் சாய்ந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தென்னை மரங்கள். ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவியிருந்த தென்னந்தோப்புகள் தரைமட்டமாகி விட்டன. காவிரி பாசன மாவட்டங்களின் மேற்கு பகுதிகளான வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டைப் பகுதிகளில் கடந்த சில பத்தாண்டுகளில் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு மாறிவிட்டனர். அவர்களின் ஒற்றை வாழ்வாதாரமாக உயர்ந்து நின்ற தென்னை மரங்கள் புயலில் சாய்ந்ததால், எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் அதையொட்டிய மக்களின் பொருளாதார பின்னணியை தெரிந்து கொண்டால்தான் அவர்களின் துயரத்தை உணர்ந்து கொள்ள முடியும். இவர்களில் பெரும்பான்மையினர் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றியும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறிய அளவிலான தொழில் செய்தும் வருவாய் ஈட்டி, சொந்த ஊரில் விளைநிலங்களிலும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பிலும் முதலீடு செய்வர். அவற்றில் இருந்து நிரந்தர வாழ்வாதாரம் கிடைக்கும் நிலை உருவானதும் சொந்த ஊர்களுக்கு திரும்புவர்.

அவ்வாறு சேர்த்த அனைத்தையும் கஜா புயலால் இழந்து தவிக்கின்றனர். பலர் 25 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பால் கிடைத்த பலனை இழந்துள்ளனர். பலர், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.3000, ஒரு தென்னை மரத்துக்கு ரூ.110, கோழிக்கு ரூ.100, ஆட்டுக்கு ரூ.1000 என்ற அளவில் இழப்பீடுகளை வழங்கி ஈடு கட்ட முடியாது. சேதமடைந்த பயிர்களை மீண்டும் வளர்த்தெடுப்பதற்கு ஆகும் செலவையும், பயிர்கள் வருவாய் கொடுக்க ஆகும் காலம் வரை குறைந்தபட்ச வாழ்வாதார உதவிகளையும் வழங்குவதன் மூலம்தான் அவர்களின் இழப்புகளை ஓரளவாவது சரிசெய்ய முடியும்.

எனவே, வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து, அப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.