ஸ்டாலினின் அபவாதம்

ஸ்டாலினின் அபவாதம்

     திருவாளர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின் போது, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியவை அனைத்தும் அபத்தமானது.  மோடி ஆட்சியில் இந்திய ஜனநயாகம் சீரழிந்து விட்டது, சமூக நல்லிணக்கம், சமூக நீதி, மாநில சுயாட்சி, அரசியல் சட்டம் போன்றவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.  கடந்த ஐந்தாண்டு காலமாக, மத்தியில் ஆண்ட மோடி அரசின் கொள்கையினால், இந்தியா 15 ஆண்டுகள் பின்தங்கிச் சென்றுள்ளது என அபத்தமாக பேசியுள்ளார்.   குடும்ப அரசியல் செய்யும் ஸ்டாலினுக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியுமா என்ற கேள்வி எழுகிறது.   பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து நான்கு ஆண்டுகள் ஆட்சியிலிருக்கும் போது, ஜனநாயத்தை குழி தோண்டி புதைத்து விட்டு, கொள்ளையடித்தவர்கள் ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையானது.  இவரின் குற்றச்சாட்டிற்கு சரியான பதிலை கூறலாம்.

      இந்திய ஜனநாயகம் சீரழிந்து விட்டது என்ற குற்றச்சாட்டிற்கு பொருத்தமானவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையும், தி.மு.க.வின் தலைமையும் தான்.   ஒரு அரசியல் கட்சி, தனது கட்சியில் உள்கட்சி ஜனநாயகத்தை செயல்படுத்த வேண்டும்.  திருவாளர் அண்ணாதுரை மறைவுக்கு பின்னர், தலைமையை கைப்பற்ற கருணாநிதி செய்த சித்து விளைாயட்டு என்ன என்பதை பார்க்க வேண்டும்.   அண்ணாதுரை மறைவுக்கு பின்னர், கட்சியின் தலைவராக நெடுஞ்செழியன் வருவார் என கட்சியின் பொறுப்பாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கருணாநிதி தனது சித்து விளையாட்டை துவக்கி, எம்.ஜி.ஆரை தன்பக்கம் இழுத்துக் கொண்டு, கட்சி தலைவர் பதவியை அடைந்தார்.  இன்று வரை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில்  கூட வாரிசுகள் மட்டுமே கோலோச்ச முடியும் என்ற நிலை உள்ளது.  திருச்சி என்றால் நேரு,  திண்டுக்கல் என்றால் ஐ. பெரியசாமி, சேலம் என்றால் வீரபாண்டி ஆறுமுகம், ஈரோடு என்றால் என்.கே.கே. பெரியசாமி, கோவை என்றால் பொங்கலூர் பழனிச்சாமி, கரூர் என்றால் கே.சி.பழனிச்சாமி என மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக இருப்பதின் காரணம் என்ன என்ன?  இது தான் தி.மு.க.வின் ஜனநாயகமா என்ற கேள்விக்கு முறையான பதில் கிடையாது.

      ஜனநாயகத்தை பற்றி பேசும் திருவாளர் ஸ்டாலினுக்கு சில கேள்விகள் கேட்க தூண்டுகிறது.  முதல் கேள்வி, 1949-ல் துவக்கப்பட்ட தி.மு.க.விற்கு இன்று வரை மூன்று தலைவர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள்.  வேறு ஒருவரும் தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் கிடையாதா?  உட்கட்சி தேர்தலை முறையாக நடத்துவதாக கூறும் ஸ்டாலின், தலைமை பதவிக்கு மட்டும் கருணாநிதியை தவிர வேறு ஒருவரும் போட்டியிட்டதில்லை.  இது தி.மு.க.வின் ஜனநாயகம்.  பா.ஜ.க.வின் மீது குற்றம் சுமத்தும் ஸ்டாலின் 1951-ல் துவக்கப்பட்ட பாரதிய ஜனசங்கம் பின்னர் 1977-ல் ஜனதாவாக மாறி, 1980-ல் பாரதிய ஜனதா கட்சியாக மாறிய பின்னர் அகில இந்திய தலைவர்களாக இருந்தவர்களின் பட்டியல் என்ன என்பது தெரியுமா?  இந்திரா காந்திக்கு பின்னால் இரண்டு தலைவர்களை தவிர மற்றவர்கள் அனைவருமே இந்திரா குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.  அங்கு கூட வேறு ஆட்கள் தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் கிடையாதா என்ற கேள்விக்கும் ஸ்டாலின் பதில் அளிப்பாரா?  உள் கட்சி ஜனநாயமே இல்லாத இரண்டு கட்சியின் தலைவர்கள் தான் பா.ஜ.க.வின் ஆட்சியில் இந்திய ஜனநாயகம் சீரழிந்து விட்டது என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

      தி.மு.க. ஒன்றும் சங்கர மடமல்ல என கருணாநிதி கூறியதை, ஸ்டாலினும் வழி மொழிந்தார்.  ஆனால் தி.மு.க.வில் ஜனநாயக முறைப்படி கீழ்மட்ட தேர்தல் நடந்தாலும், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கருணாநிதியின் விருப்பத்தின் படி நடந்தது என்பதும்,  தான் தலைவராக நீடிக்கவே மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்ய முனையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.  திருமதி கனிமொழி எந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார், என்று அவருக்கு  ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது?  கொள்கை முடிவு எடுக்கும் குழுவை கேட்டுக் கொண்டா மத்திய அமைச்சர் பதவி பிரிக்கப்பட்டது?  முரசொலி மாறன் கட்சிக்கு பாடுபட்டார் என்பதற்காகவா, அவரது மகனுக்கு மந்திரி  பதவி வழங்கப்பட்டது? ஜனநாயகத்தின் அடிப்படையில் தானா அவரது கட்சி நடக்கிறது என்பதை ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்.

      காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகம் எப்படி பட்டது என்பதை தயவு செய்து ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.   காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு புருஷோத்தம தாஸ் தாண்டனை படேல் முன்நிறுத்தினார்.  நேருவுக்கும் தாண்டனும் நல்ல நண்பர்கள் ஆனால் கொள்கை ரீதியாக மாறுபட்டவர்கள்.   இந்து முஸ்லீம்களுக்கு இடையே சமாதானத்தை நாடும் கொள்கையே இந்தியாவிற்கு தேவை என வாதிட்டவர் நேரு.   தனது சுயநலத்திற்காக தாண்டனை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், உலகுக்கு தவறான அறிகுறிகளைத் தெரிவிக்கும் என நேரு வாதிட்டார்.  ஆனால் 1950-ல் நடைபெற்ற தேர்தலில் தாணடன் எளிதாக வெற்றி பெற்றார்.   தன்னை பெரிய ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் நேரு, ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில், நான் ஆட்சியிலோ காங்கிரஸ் கட்சியிலோ இருப்பதை விட தாண்டனின் தேர்வு முக்கியமானது என்பதற்கான மிகத் தெளிவான அடையளாமாகிவிட்டது.  காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் என்னுடைய உபயோகம் முற்றிலும்  தீர்ந்து போய்விட்டதாக ஒவ்வோர் உணர்வும் சொல்கிறது என எழுதினார்.  ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட ஒரு தலைவருக்கு எதிராக கருத்து கூறியது மட்டுமில்லாமல்,  நயவஞ்சக முயற்சியின் காரணமாக, ஜனநாயகத்திற்கு புறம்பாக தாண்டன் ராஜினாமா செய்ததது மட்டுமில்லாமல், கட்சியும் ஆட்சியும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதற்காக கட்சி தலைவர் பதவியையும் தானே ஏற்றுக் கொண்டார்,  இந்த வழி ஜனநாயகம் மோடியின் சிந்தனையிலும் கிடையாது, கட்சியிலும் கிடையாது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

      திருமதி சோனியா காந்தியை அருகில் வைத்துக் கொண்டு, இந்திய ஜனநாயகத்தைப் பற்றி பேசும் ஸ்டாலின், சோனியா செய்த ஒரு செயலை மறந்து விட்டு ஆலாபனை செய்துள்ளார்.  2004-ல் ஐ.மு.கூ. ஆட்சியில்  வெறும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சோனியாவிற்கு, பிரதம மந்திரிக்கு உரிய அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.  இது போல் கருணாநிதி தனது மகனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே துணை முதல்வர் பதவியை உருவாக்கினார் .  இளைஞர் அணிக்கு வயது 35 தான் என்பது அனைத்து கட்சியிலும் உள்ள நடைமுறை, ஆனால் தி.மு.க.வில் மட்டுமே ஸ்டாலினுக்கு தி.மு.க. பொருளாளர் பதவி கொடுக்கும் வரை அதவாது 55 வயதுக்கு மேலும் கூட இளைஞர்  அணித் தலைவராக வலம் வந்தவர் இந்திய ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசுகிறார்.   திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசு துறையை சீரழித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.  தேசயமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது அரசு நிறுவனங்களில் காங்கிரஸ் கட்சியினரை நியமிக்கச் சொல்லித்தான் புலோக்குடன் அஹமது படேல் சௌத் பிளாக்கிற்கு பெரும்பாலும் வருவார் என ஒரு அரசு அதிகாரி எழுதிய புத்தகத்தில் உள்ளதை ஸ்டாலின் படித்திருந்தால், இந்திய ஜனநாயகத்தை தி.மு.க.வும், காங்கிரஸூம் எவ்வாறு சீரழித்தது என்பது புலனாகும்.

      திருவாளர் ஸ்டாலின் இந்திய ஜனநாயகம் மோடி ஆட்சியில் சீரழிந்து விட்டதாக கூறுபவர், தி.மு.க.வின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் எண்ணிக்கையில் அடங்க இயலாது.  மூச்சுக்கு முண்ணூறு தடவை தாழமுத்து நடராஜன் என பல்லவி பாடுபவர்கள், மொழிக்காக உயிர்விட்ட தி.மு.க. தொண்டர்களின் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவருக்கு கட்சியிலோ அல்லது ஆட்சியிலிருக்கும்  சமயத்திலோ முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டதா என்பதை குறிப்பிட வேண்டும்.   கருணாநிதியின் கட்டுப்பாட்டில் கட்சி இருந்த போது, ஆட்சியிலும், கட்சியிலும் தனது குடும்பத்தினருக்கு கொடுத்த பதவியை போல், வேறு கட்சியின் மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்காவது முக்கிய பதவி கொடுக்கப்பட்டதா?  கருணாநிதியின் குடும்பத்தில் அழகிரி, ஸ்டாலின், மாறன் , தயாநிதி மாறன், கனிமொழி போன்றவர்களுக்கு இரண்டிலும் பங்கு கொடுத்தது போல், சத்திவாணி முத்து, நன்னிலம் நடராஜன், மன்னை நாராயணசாமி , போன்றவரகளின் குடும்பத்திலிருந்து யாருக்காவது பதவி கொடுக்கப்பட்டதா என்பதை ஸ்டாலின் விளக்கிய பின்பு, பாஜக ஆட்சியில் இந்திய ஜனநாயகத்தைப் பற்றி விமர்சனம் செய்யலாம்.        

-    ஈரோடு சரவணன்