ஹிந்துக்களின் நம்பிக்கை, பாரம்பரியத்தை காக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் மாநாட்டில் தீர்மானம்

ஹிந்துக்களின் நம்பிக்கை, பாரம்பரியத்தை காக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் மாநாட்டில் தீர்மானம்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய மாநாடு, மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் மூன்று நாள்கள் நடைபெற்றது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஹிந்து மத நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியங்களை கொச்சைப்படுத்துவதற்கும், புண்படுத்துவதற்குமான அமைப்பு ரீதியான திட்டமிடல் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து அகில பாரதிய மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. சிலர் அதை பாரத கலாசாரம் அல்லாத கண்ணோட்டத்தில் வேண்டுமென்றே செய்து வருகின்றனர். அத்தகைய திட்டமிடலுக்கு சமீபத்திய உதாரணம்தான் சபரிமலை கோயில் விவகாரம். இறைவனுக்கும், பக்தர்களுக்கும் ஓர் ஒருங்கிணைந்த பந்தம் இருக்குமிடம் சபரிமலை

இந்நிலையில், உச்சநீதிமன்றம் தனது முடிவை எடுப்பதற்கு முன்பாக, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகின்ற, சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, அந்தக் கோயிலின் பாரம்பரியத்தையும், இயல்பையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மதத் தலைவர்களின் கருத்தை கவனத்தில் கொள்ளவில்லை. பெண் பக்தர்களின் கருத்தைக் கூட கேட்கவில்லை.

இதையடுத்து, தீர்ப்பு குறித்த மறுஆய்வு மனுக்களின் விசாரணையின்போது, இந்த விவகாரங்கள் அனைத்தையும் மாண்புமிகு நீதிமன்றம் விரிவாக பரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் ஹிந்து மத நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியங்கள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.