ஹிந்து எம்.பி. கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மசோதா

ஹிந்து எம்.பி. கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மசோதா

கட்டாய மதமாற்றத்துக்குக் கடுமையான தண்டனை கோரியும், குழந்தைத் திருமணத்தைக் குற்றமாக அறிவிக்கக் கோரியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த ஹிந்து எம்.பி., அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2 மசோதாக்களைத் தாக்கல் செய்துள்ளார். 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரவீணா மற்றும் ரீனா என்ற சிறுமிகளை அண்மையில் கடத்திய மர்ம நபர்கள், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண்களுடன் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். அந்தச் சிறுமிகளை முஸ்லிம் மதத்துக்கு மாற்றுவதற்காகவே, அவர்களுக்கு இத்தகைய திருமணம் செய்து வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தான் தெரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஹிந்து எம்.பி.யான ரமேஷ் குமார் வான்க்வானி, குழந்தைத் திருமணக் கட்டுப்பாட்டுச் சட்டத் திருத்த மசோதா, சிறுபான்மையினர் பாதுகாப்புக்கான குற்றவியல் விதிகள் மசோதா ஆகியவற்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களான லால் மால்ஹி, சுனிலா ரூத் ஆகியோரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. தர்ஷண், பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி. ரமேஷ் லால் ஆகியோரும் இந்த மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானத்தில் கையெழுத்திட்டிருந்தனர். அந்தத் தீர்மானத்தில், மதத்தின் பெயரால், மக்களிடையே வெறுப்புணர்வைப் பரப்பி வருபவர்களுக்கு, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்படுவதுபோல் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கட்டாய மதமாற்ற நடவடிக்கையை மேற்கொள்ளும் நபர்களுக்கு, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.